நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த வருடம் தனது காதலரான ஆண்டனி தட்டிலை கோவாவில் வைத்து திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையே அவர் திருமணத்துக்கு முன்பாக நடித்த ஹிந்தி திரைப்படமான பேபி ஜான் படம் படுதோல்வியை சந்தித்தது. திருமணத்துக்கு பிறகும் நடிப்பதில் முழு ஆர்வத்துடன் இருக்கும் அவர் இன்னொரு பாலிவுட் படத்தில் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது.
நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தில் தனது திரை பயணத்தை தொடங்கினார். அதற்கு அடுத்தபடியாக அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மெகா ஹிட்டானது. அதிலிருந்து ஃபுல் ஃபார்மில் செல்ல ஆரம்பித்தார் அவர். விஜய், சூர்யா, விக்ரம் என வரிசையாக முன்னணி ஹீரோக்களுடன் நடித்துக்கொண்டிருந்தார். அப்படிப்பட்ட சூழலில்தான் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் கீர்த்தியால் ஒழுங்காக நடிக்கவே முடியாது என்று பலரும் சொன்னார்கள். ஆனால் அவர்களது பேச்சுக்களையெல்லாம் தனது ஃபெர்பார்மென்ஸால் அடித்து துவம்சம் செய்தார் அவர். அப்படியே சாவித்திரியாக மாறிய அவரை கண்டு பலரும் ஆச்சரியப்பட்டார்கள்.மேலும் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. ஆனால் தேசிய விருது வென்றாலும் முன்னர் போல் அவருக்கு வாய்ப்புகள் எதுவும் சரளமாக வராமல் இருந்தது.
இதனையடுத்து உதயநிதி ஸ்டாலினை வைத்து மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படம் கீர்த்திக்கு மீண்டும் ஒரு திருப்புமுனையை கொடுத்தது. அந்தப் படத்துக்கு பிறகு சைரன், ரகுதாத்தா உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்திலும் கமிட்டானார். அதில் வருண் தவான் ஹீரோவாக நடித்திருந்தார். அட்லீ படத்தை தயாரித்திருந்தார். பெரிய எதிர்பார்ப்போடு வெளியான படம் படுதோல்வியை சந்தித்தது. அதேசமயம் கீர்த்தி அந்தப் படத்தில் போட்ட ஒரு கிளாமர் டான்ஸ் சென்சேஷனல் ஆனது.
இதற்கிடையே கீர்த்தி சுரேஷ் பத்து வருடங்களுக்கும் மேலாக தனது பள்ளி கால தோழர் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். சில பிரபலங்களுடன் அவர் இணைத்து பேசப்பட்டுக்கொண்டே இருந்த சூழலில்; கீர்த்தியே தனது காதலரான ஆண்டனி தட்டிலை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். மேலும் அவர்களது காதலுக்கு வீட்டில் சம்மதம் கிடைத்ததன் காரணமாக திருமணத்துக்கான ஏற்பாடுகளும் தடல் புடலாக தொடங்கின. அதன்படி கோவாவில் வைத்து ஆண்டனியும், கீர்த்தி சுரேஷும் திருமணம் செய்துகொண்டார்கள். அந்தத் திருமணத்தில் விஜய், திரிஷா, அட்லீ என ஏராளமானோர் கலந்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருப்பதாக குஊறப்பட்டது. ஆனால் எந்தப் படத்திலும் அவர் கமிட்டானதாக அறிவிப்பு எதுவும் வராமல் இருந்தது. அக்கா என்ற வெப் சீரிஸில் மட்டும் நடித்திருந்தார்.
இந்தச் சூழலில் அவர் இன்னொரு ஹிந்தி படத்தில் கமிட்டாகியிருப்பதாக ஒரு தகவல் வெளியானது. அதன்படி அவர் ராஜ்குமார் ராவ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியிருக்கிறார் என்றும்; அதில் அவருக்கு டீச்சர் கதாபாத்திரம் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே ஹிந்தியில் மட்டுமின்றி இரண்டு தெலுங்கு படங்களில் அவர் கமிட்டாகியிருப்பதாகவும்; அதில் ஒன்று வெங்கி அட்லூரி – சூர்யா இணையும் படம் என்றும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.