பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு திமுக, அதிமுக யாருக்கும் உரிமை இல்லை: திருமாவளவன்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், அதை வைத்து திமுக, அதிமுக இடையே வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. விசிக தலைவர் திருமாவளவனோ, பொள்ளாச்சி வழக்கில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இதில் உரிமை கோருவதில் அர்த்தமில்லை என்று ஓபனாக பேசியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கோவை வந்திருந்தார். முன்னதாக கோவை விமான நிலையத்தில் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழ்நாட்டுக்கே களங்கத்தை ஏற்படுத்திய ஒரு செயல். இது போன்ற கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் இனி தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியாவில் எந்த ஒரு மூலையிலும் நடக்கக்கூடாது. அதை உறுதிப்படுத்தும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி நந்தினி தேவிக்கு என்னுடைய, பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வழக்கில் குற்றவாளிகள் தப்பித்து விடுவார்களோ என்ற ஐயம் அதிகமாக இருந்தது. ஆனால் அரசுத் தரப்பில் உறுதியாக நின்று வழக்கறிஞர்கள் வாதாடி இருக்கிறார்கள் என்பது இதில் உறுதியாகிறது. அந்த வகையில் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களையும் பாராட்டுகிறேன். பாதிக்கப்பட்ட குடும்பம் மட்டுமல்லாமல், மனிதநேயம் உள்ள அனைவருக்கும் ஏற்பட்ட ஒரு கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்தாகவே தீர்ப்பு அமைந்துள்ளது. அதனால் இத்தீர்ப்பை மனதார வரவேற்கிறேன்.

இந்த வழக்கில் திமுக, அதிமுக, விசிக உள்ளிட்ட யாரும் உரிமை கோருவதில் நியாயம் இல்லை. சான்றுகள் வலுவாக இருந்தது. செல்போன்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவு செய்த தடயங்கள் ஆகியவை தண்டனைக்கு ஆதாரங்களாக இருந்தன. அதனால் அவர்களால் தப்பிக்க இயலவில்லை. அதிலிருந்து அவர்களால் மீள முடியாத அளவிற்கான ஆதாரங்களை அவர்களே உருவாக்கி விட்டார்கள் என்பதே உண்மை. அந்த ஆதாரங்கள் தான் இந்த தண்டனைக்கு மிக முக்கிய வலுவான தடயங்களாக இருந்துள்ளன. அதன் காரணமாக இந்த விவகாரத்தில் யாரும் உரிமை கோருவதில் அர்த்தமில்லை.

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கை சிபி ஐக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக உள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி மட்டுமல்ல, யார் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கு, அந்த வழக்கு என்றெல்லாம் தனித்தனியாக அணுக முடியாது. பாலியல் வல்லுறவு குற்றங்கள் குறித்து மாநில அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும். சமூக வலைதளங்களில் பரவும் ஆபாச விளம்பரங்களை தடை செய்ய வேண்டும். அந்த வலைதளங்களை முற்றிலும் பயன்படுத்த முடியாத அளவுக்கு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இதில் ஒன்றிய அரசுக்கு கூடுதல் பொறுப்புள்ளது. மாநில அரசுக்கும் பொறுப்புள்ளது.

பள்ளி கல்லூரிகளை ஆர்எஸ்எஸ் ஷாகா பயிற்சியளிக்கும் பாசறை மையங்களாக பயன்படுத்தி வருகிறார்கள். நான் சென்னையில் கல்லூரி மாணவனாக தங்கி இருந்தபோது ஆர்எஸ்எஸ் தொண்டர்கள், என்னையும் பயிற்சிக்கு அழைத்திருக்கிறார்கள். எனக்கே அந்த அனுபவம் உள்ளது. ஷாகா பயிற்சி பள்ளி வளாகங்களில் அதிகாலை நேரங்களில் நடத்துகின்றனர். அது இன்னும் தொடர்கிறது. அவர்கள் மதவாத கருத்துகளை இதன் மூலம் பரப்புகிறார்கள். யோகா பயிற்சி பெறுவதாக கூறி மேலோட்டமாக சொல்லப்பட்டாலும், மதவாத அரசியலை பிஞ்சு உள்ளத்தில் திணிக்கிறார்கள். ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள் இவற்றைக் கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரி மாணவர்களிடையே பரவக்கூடிய மதவாத அரசியலை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.