நான் சொல்லும் அத்துமீறலுக்கு அர்த்தம் தெரியாமல் கலாய்க்கிறார்கள்: திருமாவளவன்!

நான் சொல்லும் அத்துமீறலுக்கு அர்த்தம் தெரியாமல் கலாய்க்கிறார்கள், அத்துமீறலில் பெரிய அரசியல் உள்ளது எனவும், தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும் விசிகவிற்கு இருக்கும் எழுச்சி இல்லை, இந்த எழுச்சியை தக்க வைத்தாலே நமக்கு யார் துணையும் வேண்டாம்; தனியாகவே சாதிக்க முடியும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி விசிக சார்பில் திருச்சியில் மே 31 ஆம் தேதி பேரணி நடைபெறவுள்ளது. இது தொடர்பான மண்டல அளவிலான சிறப்பு செயற்குழு கூட்டம் சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விசிக தொண்டர்களிடையே பேசிய திருமாவளவன் கூறியதாவது:-

விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் எல்லாத்தையும் மீறி மேடையில் தொண்டர்கள் ஆக்கிரமித்து உள்ளார்கள். எதுக்காக திரண்டு இருக்கிறோம் என்பதற்கு அடையாளம் என்னவென்றால் கட்சியின் கட்டுப்பாடுகளை மதிக்கிறோம் என்பது தான் அடையாளம். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் மேடைக்கு எதிராக அமர வேண்டும் என்று ஆயிரம் முறைக்கு மேல் சொல்லி இருக்கிறேன்; அதை பின்பற்றுவதில்லை, எனவே அனைவரும் இதை பின்பற்ற வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை கூறுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவது தான்; நமது கட்சியின் வளர்ச்சிக்கான அடையாளம். மக்கள் அமைப்பாக திரண்டால் தான் வன்கொடுமைக்கும், அனைத்துவித சுரண்டலுக்கும் எதிராக விடுபட முடியும்.

அத்துமீறல் என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளது. இது ஒரு ஜாதிக்கானது அல்ல; அனைத்து ஜாதி மதம் தேசத்திற்கும் பொதுவானது. உரிமையை பெறுவதற்கு தடைகள் வந்தால் அதை மீறுவது தான் அத்துமீறலுக்கான பொருள். நான் சொல்லும் அத்து மீறலுக்கு அர்த்தம் தெரியாமல் கலாய்க்கிறார்கள். அத்துமீறலில் பெரிய அரசியல் உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டம் நடத்தும் போது பெயர் வைக்க சொல்லுவது புத்தகத்தில் கையெழுத்து பெறுவது உள்ளிட்டவைகளில் ஈடுபடக் கூடாது; இவையெல்லாம் அவை கூறிய மதிப்பு இல்லை. கட்சிக்குள் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும்; என்னுடைய கவலை எல்லாம், ஒரு அமைப்பாக திரளாதவர்களால் எதுவும் சாதிக்க முடியாது. ஒரு கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் அதிர்ஷ்டத்தால் வந்து விட முடியாது; முறையாக மக்களை சந்தித்து, மக்களின் நன்மதிப்பைப் பெற்று ஆதரவை பெற்று தான் ஒரு இடத்திற்கு வர முடியும். நன்மதிப்பை பெற்று வருகிறோம் என்பதற்கு சான்று நமது சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் சான்று. உங்களையும் மக்கள் ஏற்று விட்டார்கள் என்று நீங்களும் ஒரு மாநில கட்சி தான் என்று தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைப்பாக திரண்டால் மட்டுமே ஆட்சிக்கு வர முடியும். விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கூட்டத்தில் தினசரி நசுக்கப்படுவான் நான் தான். அனைத்து பக்கமும் நசுக்குகிறார்கள்; ஒரு டன் அளவிற்கு நம் கட்சியினரை நசுக்கி இருக்கிறார்கள்

இந்தியாவில் எந்த ஒரு கட்சிக்கும் விடுதலை சிறுத்தை கட்சியின் அளவிற்கு ஆதரவு இல்லை.. இதை முறைப்படுத்தி, ஒழுங்குபடுத்திய அமைப்பாக மாறினால் யாருடைய தயவும் தேவையில்லை. மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்ற நிலையிலும் கொடிக்கம்பம், மாநாடு, பொதுக்கூட்டம் உள்ளிட்ட அனைத்திலும் பிரச்சினைகள் வருகிறது. அதற்கு என்ன தீர்வு என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்னும் வலிமை பெற வேண்டும். ஜாதி,மத பெருமை பேசுவது வெற்றியல்ல. ஆண்ட கட்சி என்று பேசுவது பெருமை அல்ல; கட்சியில் உள்ள அனைவரும் அரசியல் பேசவேண்டும்; அரசியல் கோட்பாடுகள் தெரிந்திருக்க வேண்டும் அதுதான் வெற்றி. அதிகாரத்தை நோக்கி நகர வேண்டும் என்றால், நம்மை வளமை, செழுமைப்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.