கட்சி சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு உடனடியாக அங்கீகாரம் வழங்குமாறு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்தியுள்ளார்.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். பொதுச் செயலாளரை தேர்தல் மூலம் தேர்ந்தெந்தெடுப்பதற்கான வழிமுறைகளும் தீர்மானிக்கப்பட்டன. 4 மாதங்களில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கான விதிகளும் அறிவிக்கப்பட்டன. மேலும் புதிதாக துணைப் பொதுச் செயலாளர் பதவியும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மானம் உட்பட பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அது தொடர்பான தகவல்களை தலைமை தேர்தல் ஆணையத்தில் இ-மெயில் வாயிலாக தாக்கல் செய்தனர். மேலும் கட்சி விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களும் தாக்கல் செய்யப்பட்டன. 97%-க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தனர். அந்தப் புகாரில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளதாகவும், கட்சியின் உட்பிரிவுக்கு எதிராக திருத்தங்கள் கொண்டுவந்து தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கொடுக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு முடிவுகள் தொடர்பான ஆவணங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் நேரில் சென்று அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை எம்.பியுமான சி.வி.சண்முகம் தாக்கல் செய்துள்ளார். டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு நேரில் சென்ற சி.வி.சண்முகம் ஆவணங்களை தாக்கல் செய்து, ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவின் முடிவுகளுக்கு தேர்தல் ஆணையம் விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பின்னர் செய்தியாளார்களைச் சந்தித்துப் பேசிய சி.வி.சண்முகம், “பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் அன்றைய தினமே தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுவிட்டது. பொதுக்குழு தீர்மானங்கள், சட்டத் திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இடைக்கால பொதுச் செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதற்கு 2,428 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.
மேலும், முன்னாள் அமைச்சர் பொன்னையன், சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி ஆகியோரை தரக்குறைவாக விமர்சித்துப் பேசியதாக வெளியான ஆடியோ குறித்த கேள்விக்கு பதிலளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “பொன்னையன் பேசியதாக பரவும் ஆடியோவுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அவரை நாங்கள் நம்புகிறோம். அப்படியே அவர் சொல்லியிருந்தாலும், அவரின் வயது காரணமாக அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.