‘2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக கூட்டணியில்தான் இருப்போம்’ என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் கூறினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் தலைமை வகித்தார். தேசிய அரசியல் ஆலோசனைக் குழு தலைவர் இமாமே ஹிந்த் செய்யது சாதிக் அலி சிஹாப் முன்னிலை வகித்தார். தேசிய பொதுச்செயலாளரும் கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான பி.கே.குஞ்ஞாலிக்குட்டி வரவேற்றார்.
கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீர் பகல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த தாக்குதல் தொடர்பாக ஏற்பட்ட விரோதப் போக்குகள் மற்றும் அப்பாவி பொதுமக்களின் துயர இழப்பு குறித்து ஆழ்ந்த கவலை தெரிவிக்கப்பட்டது. மேலும், அனைத்து பயங்கரவாதச் செயல்களுக்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுதவிர பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் தேசியத் தலைவராக கே.எம்.காதர் மொய்தீன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் காதர் மொய்தீன் கூறியதாவது:-
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில், இன்று முதல் 4 ஆண்டுகளுக்கு தேசிய நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. தலைவர், பொதுச்செயலாளர் உள்பட 28 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய – பாகிஸ்தான் போரை நிறுத்திய அதேவேகத்தில், இஸ்ரேல் போரை நிறுத்தும் முயற்சியை உலக அளவில் செய்ய வேண்டும்.
2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் தமிழகத்தில் மட்டுமின்றி, கேரளத்திலும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சியை முஸ்லிம் சமூகம் ஒட்டுமொத்தமாக ஆதரிக்கிறது. நேற்று இன்று நாளை என எப்போதும் திமுக கூட்டணியில் இருப்போம்.
கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியில் இந்திய முஸ்லிம் லீக் தொடர்ந்து பயணித்து வருகின்றது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று, கேரளாவில் ஆட்சி அமைய இருப்பதாக பல தரப்பு மக்களும் தெரிவிக்கின்றனர். கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அமைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பகல்காம் பகுதியில் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் கூறினார். அதனை செயலில் நிரூபித்து காட்டியுள்ளார் அதற்கு எங்களது வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறினார்.