“நாட்டில் கடந்த 3 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற முடியவில்லை. மக்களவைத் தேர்தலிலும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. பாஜக கையாளும் உத்திகளுக்கு ஈடாக இண்டியா கூட்டணி செயல்படவில்லை. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஒருமித்த கருத்து வரவில்லை. இதை மையப்படுத்தி தான் ப.சிதம்பரம் பேசியுள்ளார்” என்று சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கார்த்தி சிதம்பரம் எம்.பி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:-
மகளிர் உரிமைத் தொகையை பாகுபாடின்றி அனைவருக்கும் வழங்க வேண்டும். மற்ற திட்டங்களை விட நேரடியாக பணம் கொடுப்பது மிகச் சிறந்தது. இதன்மூலம் உள்ளூர் பொருளாதாரம் வளரும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை இண்டியா கூட்டணி வலுவாக உள்ளது. ஆனால், இந்தியா அளவில் இண்டியா கூட்டணி எந்தளவில் இருக்கிறது என்பதை தான் ப.சிதம்பரம் கூறியுள்ளார். நாட்டில் கடந்த 3 தேர்தல்களில் எங்கள் கட்சி வெற்றி பெற முடியவில்லை. மக்களவைத் தேர்தலிலும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. பாஜக கையாளும் உத்திகளுக்கு ஈடாக இண்டியா கூட்டணி செயல்படவில்லை. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஒருமித்த கருத்து வரவில்லை. இதை மையப்படுத்தி தான் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு என்பது நீதிமன்ற தீர்ப்பு தான். அதனை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. ஆனால், பாதிக்கப்பட்டோருக்கு கூடுதலாக நிதி கொடுப்பதை குறை சொல்ல முடியாது. பொள்ளாச்சி பாலியல் வழக்கு, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு ஆகிய இரண்டிலும் மிரட்டியே பலாத்காரம் செய்துள்ளனர் என்றாலும், இரண்டுக்கும் வெவ்வேறு அளவுகோல் உள்ளன. அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கிலும் நியாயமான முறையில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.
தமிழக பொருளாதாரத்தை சீர்ப்படுத்த வேண்டுமென்றால், முதலில் மின் வாரியத்தில் இருக்கும் ரூ.1 லட்சம் கோடி கடனை குறைக்க வேண்டும். கல்விக் கடன் தள்ளுபடி என்று மாநில அரசு வாக்குறுதி கொடுத்தாலும், மத்திய அரசே தள்ளுபடி செய்ய அதிகாரம் உள்ளது. அதற்கு அவர்களுக்கு மனமில்லை. ஒவ்வொருவரது கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவது என்ற அறிவிப்பு எந்தளவுக்கு உண்மையோ, அதுபோன்றது தான் மாநில அரசின் கல்விக் கடன் ரத்து, மாதந்தோறும் மின்சார கட்டணம் கணக்கீடு என்பது போன்ற வாக்குறுதிகள். இவ்வாறு அவர் கூறினார்.