குஜராத் கலவர வழக்கில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சிவ் பட் கைது!

குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002-ம் ஆண்டு வகுப்பு கலவரம் ஏற்பட்டது. புலனாய்வு குழுவின் அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது.

குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002-ம் ஆண்டு வகுப்பு கலவரம் ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கில் அப்போதைய குஜராத் அரசு மீது குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதைய முதல் மந்திரி மோடி மீதும் புகார் கூறப்பட்டது. இதில் கலவரம் தொடர்பாக அதிகாரிகள் சிலர் போலி ஆவணங்கள் தயாரித்ததாகவும், பொதுமக்களை திசைதிருப்ப பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் புலனாய்வு குழுவினர் தெரிவித்தனர். புலனாய்வு குழுவின் அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. மேலும் இந்த வழக்கில் அப்போதைய குஜராத் முதல் மந்திரியாக இருந்த மோடிக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறியது. இதையடுத்து இந்த வழக்கில் போலி ஆவணங்களை தயாரித்து மக்களை திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சமூக ஆர்வலர் டீஸ்டா செடால்வட் கைது செய்யப்பட்டார். இதுபோல முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. ஆர்.பி.ஸ்ரீகுமாரும் கைதானார்.

இவர்கள் இருவரை தொடர்ந்து கலவரம் தொடர்பாக போலி ஆவணங்கள் தயாரித்தல், சாட்சியங்களை உருவாக்குதல் போன்ற காரணங்களுக்காக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சிவ் பட்டை கைது செய்ய சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் முடிவு செய்தனர். சஞ்சிவ் பட் ஏற்கனவே ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு பலன்பூர் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். குஜராத் கலவரத்தில் இப்போது சஞ்சிவ் பட் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் பலன்பூர் ஜெயிலில் இருந்து மாற்றப்படுவார் என்று அகமதாபாத் குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் சைதன்யா தெரிவித்தார்.