நடிகை ராஷி கன்னா படப்பிடிப்பின் போது படுகாயம்!

நடிகை ராஷி கன்னா படப்பிடிப்பின் போது உயரமான மேடையில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருபவர் ராஷி கன்னா. இவர் தமிழில் “இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பாா், திருச்சிற்றம்பலம், சர்தார்” உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் ‘அகத்தியா’ படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது ‘தெலுசு கதா’ என்ற தெலுங்கு படத்திலும், ‘பார்ஜி-2’ என்ற இந்தி வெப் தொடரிலும் நடித்து வருகிறார். இதில் வெப் தொடருக்காக கடுமையான சண்டை காட்சிகளில் ராஷி கன்னா நடித்து வருகிறார்.

இந்த நிலையில் , நடிகை ராஷி கன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதாவது, படப்பிடிப்பின் போது ராஷி கன்னா உயரமான மேடையில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்துள்ளார். அப்போது அவரது மூக்கு, கை மற்றும் கால்களிலும் அடி விழுந்தது ரத்த வடிகிறது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சில நாட்கள் அவர் ஓய்வில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

ராஷி கன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘சில கதாபாத்திரங்களுக்கு தேவையானதை செய்துதான் ஆகவேண்டும். ஏற்படும் காயங்களை பொருட்படுத்தக்கூடாது. நாமே புயல் ஆன பிறகு, இடி-மின்னல் என்ன செய்துவிடும்?’, என்று பதிவிட்டுள்ளார். ராஷி கன்னா வேகமாக குணமடைய ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.