மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பயோபிக் படத்தில் நடிகர் தனுஷ், கலாமாக நடிக்கிறார். இது குறித்து அறிவிப்பை இன்ஸ்டாகிராம் தளத்தில் தனுஷ் பகிர்ந்துள்ளார்.
“உத்வேகமிக்க தலைவரான அப்துல் கலாம் அய்யாவின் வாழ்க்கையை சொல்லும் படத்தில் நான் நடிப்பதை எனது பாக்கியமாக கருதுகிறேன்” என தனுஷ் தனது பதிவில் தெரிவித்துள்ளார். கேன்ஸ் பட விழாவில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது.
இந்தப் படத்தை ‘ஆதிபுருஷ்’ பட இயக்குனர் ஓம் ராவத் இயக்குகிறார். அபிஷேக் அகர்வால், பூஷன் குமார், கிரிஷன் குமார், அனில் சுங்காரா ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கின்றர். இதில் அபிஷேக் அகர்வால் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் ராமேஸ்வரம் தீவிலிருந்து ராஷ்டிரபதி பவன் வரையிலான அப்துல் கலாமின் வாழ்க்கை பயணத்தை இந்த படம் சொல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் ஓம் ராவத் அதை தனது சமூக வலைதள பதிவில் கேப்ஷனாக குறிப்பிட்டு கலாம் படத்தின் போஸ்டரை பகிர்ந்துள்ளார். ‘அப்துல் கலாம் – தி மிஸைல் மேன் ஆப் இந்தியா’ என்ற பெயரில் இந்தப் படம் ‘பான் இந்தியா’ அளவில் உருவாகிறது.
தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ராமேசுவரம் தீவில் சிறு படகு உரிமையாளரின் மகனாய் கடந்த 1931ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் நாள் பிறந்த அவரின் முழுப் பெயர் ஆவுல் பக்கீர் ஜலாலுதீன் அப்துல் கலாம். கலாமுடன் பிறந்த சகோதர்கள் மூன்று பேர். ஒரு சகோதரி. கடைக் குட்டியான கலாம் பள்ளி நாட்களில் சைக்கிளில் வீடு வீடாய்ச் சென்று செய்தி தாள் விநியோகித்ததை தன் வாழ்நாள் முழுவதும் பேசி மகிழ்ந்திருக்கிறார்.
பள்ளிப் படிப்பினை ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியிலும், திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இளநிலை இயற்பியலும், சென்னை எம்.ஐ.டியில் விமானப் பொறியியலும் பயின்ற அப்துல் கலாம், 1958-ம் ஆண்டு டெல்லியில் உள்ள தொழில்நுட்ப மையத்தில் முதுநிலை விஞ்ஞானி உதவியாளராக சேர்ந்தார். அப்போது அவரது சம்பளம் ரூ.250 பின்னர் இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார்.
அப்துல் கலாம் தனது கடின உழைப்பால் 1980-ம் ஆண்டு எஸ்.எல்.வி.ராக்கெட் திட்டப் பணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அதே ஆண்டு, ரோகிணி செயற்கைக் கோளும் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அப்துல் கலாம் தலைமையில் நடைபெற்ற பிருத்வி, அக்னி, ஆகாஷ், நாக், திரிசூல் ஆகிய ஐந்து ஏவுகணைகள் தயாரிக்கும் பணிகள் வெற்றி பெற்றன. இந்த ஏவுகணைகளுக்கு ஐந்து இயற்கை மற்றும் ஆன்மிகத்துடன் தொடர்புடைய பெயர்களை தேர்ந்தெடுத்து கலாம் வைத்தார்.
இதனால் ‘இந்தியாவின் ஏவுகணை நாயகன்’ என்ற பட்டத்துக்கும் சொந்தக்காரர் ஆனார் கலாம். 1998-ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி மதியம் 3.45 மணி பொக்ரானில் இந்தியா தனது முதல் அணுகுண்டு சோதனையை அப்துல் கலாமின் தலைமையில் அமெரிக்காவின் செயற்கைக் கோள்களின் கண்களுக்கு மண்ணைத் தூவிவிட்டு வெற்றிகரமாக நடத்தியது. உலக நாடுகளின் ஒட்டு மொத்த கவனமும் அப்போது நம் இந்தியா மீது திரும்பியது.
ஜூலை 25, 2002 அன்று இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவரானார் அப்துல் கலாம். குடியரசுத் தலைவராக இருந்த காலத்திலும், பதவி முடிந்த பின்னரும் அப்துல் கலாம் நாடு முழுவதும் பயணம் செய்து கல்லூரி, பள்ளிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர்களுக்கு உத்வேகத்தை அளித்து வந்தார். அப்படி, மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள கல்லூரி விழா ஒன்றில் கடந்த 27.07.2015 அன்று மாணவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது கலாம் உயிரிழந்தார். பின்னர் கலாமின் உடல் ராமேசுவரம் தீவில் உள்ள பேக்கரும்பு என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.