இதையெல்லாம் ஆக்கிரமிப்பு இடி என்று சொல்கிறீர்களே.. கடற்கரையில் 4 சமாதிகள் இருக்கிறதே அதை யார் இடிப்பது? ஒவ்வொருத்தரும் இரண்டு இரண்டு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து இருக்கிறீர்களே?.. கடற்கரை கடற்கரை தானே.. இது எப்படி கல்லறைகளாக மாறியது.. இதை ஏன் யாரும் கேட்கவில்லை.. என்று சீமான் ஆவேசமாக பேசினார்.
சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த குடியிருப்புகள் அகற்றப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அங்கு சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசியதாவது:-
மக்களுடைய வாழ்விடங்களை இடிப்பதை நீங்க பார்த்து இருப்பீங்க.. இந்த பிரச்சினை இப்போது இல்லை. ஏற்கனவே இருந்து வந்தது தான். அப்போது நாங்க தான் இதே இடத்தில் நின்று போராடி தடுத்தோம். கொஞ்ச நாள் தடுத்து வச்சுருந்தோம். இப்போ மீண்டும் அதே பிரச்சினை. பல்லாவரம் அனாகபுத்தூர் மட்டுமில்லை. சென்னையில் பல இடங்களில் நம் மக்களின் வாழ்விடங்களை ஆக்கிரமிப்பு என்று சொல்லி அப்புறப்படுத்தியது எல்லாருக்கும் தெரியும்.
இப்போ இங்க ஆக்கிரமிப்பு பண்ணிட்டாங்கன்னு சொல்லி அப்புறப்படுத்துறாங்க.. எனக்கு ஒரே ஒரு கேள்வி தான் வருகிறது. அந்த மக்களுக்கும் அந்த கேள்வி தான்.. இது நீர் நிலைப் பகுதி என்று தெரிகிறது. அப்போது அதை ஆக்கிரமித்து கட்டும்போது யாரும் ஏன் தடுக்கவில்லை. அப்போது எல்லாரும் என்ன பண்ணிக்கொண்டு இருந்தீங்க.. ஆக்கிரமிக்கும் போதே தடுத்திருந்திருக்கலாம்.
அவங்க கஷ்டப்பட்டு வீடு கட்டி, மின் இணைப்பு பொருத்தி, வீட்டு வரி செலுத்தி, ஓட்டுரிமை வாங்கி, சாலைகள் கூட அவர்களே அமைத்தார்கள் என்று சொல்கிறார்கள். ஒரு 60 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறார்கள். இப்போது திடீரென்று ஒரே நாளில் வேறு ஒரு இடத்தில் போட்டால் எப்படி?.. இவங்க குழந்தைகள் எல்லாரும் இங்க படிக்கிறாங்க. திடீரென மாறும் போது என்ன செய்வார்கள்..
ஆ.. ஊன்னா அதிகாரம் படைத்தவர்கள் நீதிமன்றத்தை கை காட்டி விடுகிறார்கள். உங்கள் பலருக்கும், மனசாட்சி உள்ள எல்லாருக்கும் தெரியும். பல நீதிமன்றங்களே நீர் நிலைகளில் தான் கட்டப்பட்டிருக்கு. குறிப்பாக மதுரை உயநீதிமன்ற கிளை, திருவள்ளூர் நீதிமன்றம் என பல இடங்கள், பல அரசு குடியிருப்புகள்.. வள்ளுவர் கோட்டமே.. இதையெல்லாம் ஆக்கிரமிப்பு இடி என்று சொல்கிறீர்களே.. கடற்கரையில் 4 சமாதிகள் இருக்கிறதே அதை யார் இடிப்பது? அது ஆக்கிரமிப்பா இல்லையா.. மனசான்று இருக்க யாராவது சொல்லுங்க பார்ப்போம். ஒவ்வொருத்தரும் இரண்டு இரண்டு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து இருக்கிறீர்களே?.. கடற்கரை கடற்கரை தானே.. இது எப்படி கல்லறைகளாக மாறியது.. இதை ஏன் யாரும் கேட்கவில்லை.. உலகின் தலைசிறந்த கடற்கரையில் 2வது கடற்கரை.. ஆஸ்திரேலியாவுக்கு பிறகு சென்னை கடற்கரை.. எப்படி சில பேருக்கு இது கல்லறையாக மாறியது. எம் எம் டிஏ காலனி மாதிரி பல அரசு கட்டிடங்களே நீர்நிலைகளில் தான் கட்டப்பட்டிருக்கிறது.. வேண்டும் என்றால் வாங்க காட்டுகிறேன். இவ்வாறு சீமான் பேசினார்.