போராட்டங்களால் மட்டுமே பெண்களுக்கான நீதி கிடைக்கும் என்ற நிலை இருக்கக் கூடாது: தமிழிசை!

தமிழகத்தில் போராட்டங்களினால் மட்டுமே பெண்களுக்கான நீதி கிடைக்கும் என்ற நிலை இருக்கக் கூடாது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

அரக்கோணத்தை சேர்ந்த ஒரு பெண் கடந்த 9-ம் தேதியில் இருந்து பரிதவித்துக் கொண்டிருக்கிறார். திமுக இளைஞரணியைச் சேர்ந்த ஒருவர் தன்னை திருமணம் செய்து கொண்டு, பலருக்கு தன்னை விருந்தாக்க முயற்சி செய்வது மட்டுமல்லாமல், பெண்களை வைத்து இதேபோல பல கொடூரமான முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறார் என்றும், ஏறக்குறைய 20 பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அந்தப் பெண் குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக பல காவல் நிலையங்களில் புகார் அளித்தும், அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை. தற்போது வரை ஒவ்வொரு காவல் நிலையமாக ஓடிக் கொண்டிருக்கிறார். பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளம் வெளியே தெரியாமல் அந்த வழக்கு நடந்தது. ஆனால், திமுக ஐடி விங்கைச் சார்ந்தவர்கள், தனது அடையாளத்தை வெளியிடுகிறார்கள் என்கிறார் அந்த பெண்.

என்னென்ன கொடுமைகளை எல்லாம் அந்த பெண் அனுபவித்தார் என்று காவல் நிலையத்தில் அந்த பெண் கூறினாரோ, அதையெல்லாம் திமுக ஐடி விங்கை சார்ந்தவர்கள் வெளியிட்டுள்ளனர். இதனால், முதலில் இருந்த துணிச்சல் இப்போது இல்லை என அவர் கூறுகிறார்.

திமுக அரசு பெண்களுக்கு என்ன பாதுகாப்பை கொடுக்கிறது? பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்? தயவு செய்து பெண்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள். ஓங்கி ஒலிக்கும் பெண்களின் குரலை செவிமடுத்துக் கேளுங்கள். அவர்களின் அடையாளங்களை சொல்லி அவர்களை பரிதவிக்க விடாதீர்கள். அவர்களுக்கு நியாயம் வழங்குங்கள்.

அரக்கோணம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை அழைத்து, அவருக்கு நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும். பெண்களுக்கான நீதி போராட்டங்களினால் மட்டும்தான் கிடைக்கும் என்ற நிலை தமிழகத்தில் இருக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.