கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் தேமுதிக மாநாடில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அறிவிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
நாமக்கல்லில் தேமுதிக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
2026 சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டோம். கட்சியின் வளர்ச்சிக்கு மட்டுமே நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறோம். வரும் ஜனவரி மாதம் 9-ம் தேதி கடலூர் மாவட்டத்தில் தேமுதிக மாநாடு நடத்தப்பட உள்ளது. அந்த மாநாட்டில் யாருடன் கூட்டணி?, எத்தனை தொகுதி?, கட்சியின் வேட்பாளர்கள் யார்? என்பது குறித்து அறிவிக்க உள்ளோம். அதற்கு முன்பாக 234 தொகுதிகளிலும் தொகுதி பொறுப்பாளர்களை அறிவித்து, அதற்கான பணிகளை தொடங்க உள்ளோம். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நான் மற்றும் விஜய பிரபாகர் ஆகியோர் சுற்றுப்பயணம் செய்து நேரடியாக தேமுதிக தொண்டர்களையும் மக்களையும் சந்திக்க உள்ளோம்.
அரக்கோணம் பகுதியில் கல்லூரி மாணவி ஒருவரை திமுக பிரமுகர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துவிட்டன. அதனை திமுக அரசு தடுக்க தவறிவிட்டது. சமீபத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கின் மீதான தீர்ப்புக்கு நான் தலை வணங்குகிறேன். இன்றைய காலகட்டத்தில் பெண்களை தவறாக பயன்படுத்துகின்ற நிலை நிச்சயம் மாற வேண்டும். பெண்கள் மீதான குற்றச் சம்பவங்கள் அதிகரிக்க மது, கஞ்சா, வேலையின்மை போன்றவை காரணங்களாக உள்ளன.
இளைஞர்கள் தவறான பாதையில் செல்கின்றனர். அரக்கோணம் பாலியல் புகார் சம்பவத்தில் திமுக நிர்வாகியை அந்த கட்சி பதவியில் இருந்து நீக்கினால் மட்டும் போதாது, கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்களுக்கு நிரந்தரமான தீர்வு காண முடியும். எனவே ஒட்டுமொத்த பெண்களின் சார்பாக இதுபோன்ற செயல்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த சம்பவத்தில் ஆளுங்கட்சியின் ஆதரவோடு தவறு செய்தவர், இப்போது இல்லை என்றாலும், இன்னும் சில மாதங்களில் கட்டாயம் தண்டனை பெறுவார்.
ஏற்கனவே, மத்திய அரசு நடத்திய நிதி ஆயோக் கூட்டங்களில் திமுக அரசின் அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள். சில கூட்டத்தில் அனுமதி அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் இப்போது, மத்திய அரசின் ரூ.2,261 கோடி கல்வி உதவி தொகையை பெறுவதற்காக முதல்வர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதாக கூறுகிறார். மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய நிதியை பெற்று வருகிறாரா?, இல்லை தன்னுடைய சுய லாபத்திற்காக, கட்சியின் லாபத்திற்காக செல்கிறாரா ? என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.
அமலாக்கத் துறை, தமிழக டாஸ்மாக் ஊழல் குறித்து சோதனைகளை நடத்தி வருகின்ற நேரத்தில், அதில் சம்பந்தப்பட்டவர்கள் வெளியூர் சென்று விட்டதாக கூறுகின்றனர். ஆகாஷ் பாஸ்கர் என்பவருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. அவர் 4 திரைப்படங்களை எடுப்பதாக அட்வான்ஸ் கொடுத்தவர்களிடமும் விசாரணை நடைபெறும். மக்கள் பணத்தை ஊழல் செய்த யாரும் இனி தப்பி விட முடியாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை பெறுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.