‘படைத்தலைவன்’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது!

இயக்குநர் அன்பு இயக்கத்தில் உருவாகி உள்ள படைத்தலைவன் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளவர் நடிகர் சண்முக பாண்டியன். இவர் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன். இந்த படம் இன்று அதாவது மே 23ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கேப்டன் போல் சினிமாவில் ஆர்வம் கொண்டவர். அதேபோல் அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன் கேப்டன் போல அரசியலில் ஆர்வம் கொண்டவர். தேமுதிகவின் கட்சி நடவடிக்கைகளை கேப்டனின் மனைவி பிரேமலதாவுடன் இணைந்து கவனித்துக் கொள்கிறார், விஜய பிரபாகரன். இந்நிலையில் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் சண்முக பாண்டியன் அறிமுகமான படம் தொடங்கி, அதன் பின்னர் நடித்த சில படங்களும் சரியாக ஒர்க்-அவுட் ஆகவில்லை. அதன் பின்னர், சரியான கதைகளை மட்டும் தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்த சண்முக பாண்டியன் மிகவும் பொருமையாகவே படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இதற்கிடையில் கேப்டன் விஜயகாந்த்திற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை அருகில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டி, சினிமாவில் நடிக்காமல் இருந்தார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படமான படைத் தலைவன் படம் இன்று வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

கடந்த வாரத்தில் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கேப்டன் விஜயகாந்த்தை வைத்து படங்கள் இயக்கிய பல மூத்த இயக்குநர்கள் கலந்து கொண்டார்கள். அதில் பேசிய இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மிகவும் எமோஷனலாக பேசினார். அதாவது, ” கேப்டனின் கண்களைப் போல் சண்முக பாண்டியனின் கண்கள் உள்ளது. வளர்ந்து வாருங்கள் ரமணா 2 எடுக்கலாம்” என்று பேசினார். ஏ.ஆர். முருகதாஸ் இவ்வாறு பேசியது பலருக்கும் ஆச்சரியம் அளித்தது. மேலும் இது பேசு பொருளாகவும் மாறியது.

இந்நிலையில் படம் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் வெளியாகாது என்று படக்குழு தரப்பில் படத்தின் நாயகனான சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பாக பகிர்ந்துள்ள ஸ்டோரியில், “அனைவருக்கும் வணக்கம். படைத்தலைவன் படம் மே 23ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், திரையரங்கு ஒதுக்கீடு சிக்கலின் காரணமாக, பட வெளியீடு தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டுத் தேதியை விரைவில் உறுதி செய்து அறிவிக்க உள்ளோம். இந்த இடையூறுகளுக்கு மன்னிக்கவும். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.