பாரத மாடல் உலகத்துக்கே வழிகாட்டியாக மாறியுள்ளது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு நேற்று வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆட்சியர் ஆஷா அஜித், எஸ்.பி. ஆஷிஷ் ராவத், சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து, சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஆளுநர், கோயில் அருகேயுள்ள கோசாலையில் விடுதலைப் போராட்ட வீரர் வேலுநாச்சியார் படத்தை திறந்து வைத்து, பசுக்களுக்கு அகத்தி கீரை, பழங்களை வழங்கினார். பின்னர், சேவுகமூர்த்தி கோசாலை அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற 108 கோ பூஜை, யாகவேள்வியில் பங்கேற்றார். இதையடுத்து நடைபெற்ற விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆசியுரை வழங்கினார்.
விழாவில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 57 பேருக்கு விருதுகளை வழங்கி ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
பிரதமர் மோடி, பாரதத்தின் மகத்துவத்தை மேம்படுத்தவும் நீடித்த வளர்ச்சியை ஏற்படுத்தவும் முயன்று வருகிறார். நீடித்த வளர்ச்சிக்கு முக்கியமான உணவைத் தரும் நிலத்தை மலடாக்கக் கூடாது. நமக்கு பால் கொடுக்கும் பசுவை வதை செய்யக்கூடாது. அதேபோல, நிலத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் கோட்பாடு.
மேற்கத்திய மாடல்கள் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குகின்றன. அவற்றால் நிலம், நீர் போன்ற வளங்கள் சுரண்டப்பட்டு வருகின்றன. மேற்கத்திய மாடல் பேராசைக்கான மாடலாகும். கொரோனாவால் உலகம் பாதிக்கப்பட்டபோது மேற்கத்திய நாடுகள் தடுப்பூசியை அதிக விலைக்கு விற்றன. ஆனால், 150 நாடுகளுக்கு இலவச தடுப்பூசிகளை பிரதமர் மோடி வழங்கினார். இதுதான் பாரதிய மாடல். 2014-க்கு முன்பு பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இருந்த இந்தியா கடந்த 11 ஆண்டுகளில் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்தியாவை உலக நாடுகள் கவனிக்கத் தொடங்கியுள்ளதுடன், நம்மிடமிருந்து கற்கத் தொடங்கியுள்ளன. பாரத மாடல் உலகத்துக்கே வழிகாட்டியாக மாறியுள்ளது. 2047-க்குள் முழு வளர்ச்சி, தற்சார்ப்பு நாடாக இந்தியாவை மாற்ற மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.