‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் சூர்யா!

சசிகுமார், சிம்ரன் நடித்தா ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழுவை நடிகர் சூர்யா நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இதனை மில்லியன் டாலர் நிறுவனம் தயாரித்து, ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் வெளியிட்டது. இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைப்பாளராக பணிபுரிந்திருந்தார்.

மே 1-ம் தேதி ‘ரெட்ரோ’ படத்துடன் வெளியான இப்படம் முதல் நாளில் குறைவான வசூலே இருந்தாலும், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. தற்போது தமிழகத்தில் மொத்த வசூலில் ரூ.50 கோடியை கடந்துவிட்டது. மேலும் கேரளா, கர்நாடகா மட்டுமன்றி அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. விரைவில் இப்படம் ஜப்பானிலும் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் உள்ளிட்ட படக்குழுவினரை நடிகர் சூர்யா நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள அபிஷன் ஜீவிந்த், “இதனை எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை. ஆனால் எனக்குள் ஏதோ ஒன்று இன்று குணமடைந்ததை போல உணர்கிறேன். சூர்யா என் பெயரை சொல்லி அழைத்து தனக்கு ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் எவ்வளவு பிடித்திருந்தது என்று கூறினார். என்னுள் இருக்கும் சிறுவன் இப்போதும் 100வது முறையாக ‘வாரணம் ஆயிரம்’ பார்த்துக்கொண்டிருக்கிறான். இன்று, அந்த பையன் நன்றியுணர்வுடன் அழுகிறான். நன்றி சார்” என்று தெரிவித்துள்ளார்.