சேலம் ஓமலூர் அருகே மூதாட்டி கொலை வழக்கில் கொள்ளையனை போலீசார் சுட்டு பிடித்தனர். சங்ககிரி மலை அடிவாரத்தில் போலீசார் பிடிக்க சென்றபோது அவர்களை தாக்கிவிட்டு தப்ப முயன்ற கொள்ளையன் நரேஷ்குமாரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். நரேஷ் கத்தியால் வெட்டியதில் உதவி ஆய்வாளர் விஜயராகவன், காவலர் செல்வகுமார் பலத்த காயமடைந்தனர்.
சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகே உள்ள சின்னேரிகாடு பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் சின்னேரிகாடு பகுதியில் விவசாயம் செய்து வந்தார். மாடுகளையும் வளர்த்து வந்தார். இவர் தனது மாடுகளை மேய்ச்சலுக்கு, வனப்பகுதியை ஒட்டியுள்ள தனது நிலத்திற்கு அழைத்து சென்று வருவதை வாடிக்கையாக கொண்டு இருந்தார். கடந்த 20ஆம் தேதி வழக்கம் போல மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த சரஸ்வதியின் உறவினர்கள் அவரை தேடி சென்றனர். அப்போது, சரஸ்வதி தலையில் காயத்துடன் சடலமாக கிடந்தார். இதையடுத்து, போலீசாருக்கு உறவினர்கள் தகவல் கொடுத்தனர்.
போலீசார் ஆய்வு செய்ததில் அவரது நகைகள் மாயம் ஆகியிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்த கொடூர செயலில் ஈடுபட்டது யார் என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். ஊருக்குள் புதிதாக யாரும் வந்து சென்றார்களா? அப்பகுதியில் பதிவான செல்போன் எண்கள் என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், சேலம் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் நரேஷ் என்பவரை போலீசார் கைது செய்ய சென்றனர். அப்போது, நரேஷ் போலீசாரை கத்தியால் தாக்க முயன்றுள்ளார். இதையடுத்து, கொள்ளையன் நரேஷ் காலில் சுட்டு போலீசார் பிடித்தனர். கைதான நரேஷ்குமார் மீது 20 க்கும் மெற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
நரேஷ்குமார் தாக்கியதில் போலீசார் இருவருக்கு காயம் ஏற்பட்டது. நரேஷ் கத்தியால் வெட்டியதில் உதவி ஆய்வாளர் விஜயராகவன், காவலர் செல்வகுமார் பலத்த காயமடைந்தனர். போலீசார் தாக்கியதில் வலது காலில் காயம் ஏற்பட்ட நரேஷ்குமார் சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூதாட்டி கொலை வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் நரேஷ் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.