சூரி இப்போது கதையின் நாயகனாக பிஸியாக நடித்துவருகிறார். காமெடி ரோலில் கலக்கிவந்த அவர் ஹீரோவாகவும் கலக்க ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில்தான் அவரது படமான மாமன் திரைப்படம் வெளியானது. அவர்தான் கதை எழுதியிருந்தார். பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் சுமாரான வரவேற்பைதான் பெற்றது. இந்நிலையில் அவர் போட்டிருக்கும் ட்வீட் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
சினிமாவுக்குள் வந்து ஏகப்பட்ட கஷ்டங்களை சந்தித்தவர் சூரி. அதற்கு பிறகு சுசீந்திரன் இயக்கிய வெண்ணில கபடி குழு படத்தில் புரோட்டா காமெடி சீனில் நடித்து அடையாளப்பட்டார் அவர். அந்தப் படம் கொடுத்த வெளிச்சத்துக்கு பிறகு கோலிவுட் இயக்குநர்களின் கவனம் இவர் பக்கம் திரும்பியது. பலரும் தங்களது படங்களில் காமெடி ரோலுக்கு அவரை புக் செய்தார்கள். அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தன்னுடைய திறமையை அருமையாக வெளிப்படுத்தி தனக்கான தனியிடம் ஒன்றை தக்க வைத்துக்கொண்டார்.
தொடர்ந்து நகைச்சுவை நடிகராக நடித்துவந்த அவரை வெற்றிமாறன் கதையின் நாயகனாக மாற்றினார். அந்தவகையில் கடந்த வருடம் வெளியான விடுதலை திரைப்படத்தில் அவர் கதையின் நாயகனாக அறிமுகமானார். காமெடி ரோலில் தனக்கு கிடைத்த வாய்ப்பினை எப்படி சரியாக பயன்படுத்தினாரோ அதேபோல் கதையின் நாயகனாக கிடைத்த வாய்ப்பையும் பயன்படுத்தினார். ஆக்ஷன் காட்சிகள், இறுக்கமான காட்சிகள், காதல் காட்சிகள் என விடுதலையில் அவ்வளவு அழகாக ஸ்கோர் செய்திருந்தார் அவர்.
அந்தப் படத்துக்கு பிறகு பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் கொட்டுக்காளி படத்திலும், துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் படத்திலும் நடித்தார். இவற்றில் கொட்டுக்காளி விமர்சன ரீதியாக பலத்த வரவேற்பை பெற்றது. கருடன் படமோ விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. முக்கியமாக நல்ல முறையில் வசூலும் செய்தது. இதனால் சூரி இனி காமெடி ரோலில் நடிக்கமாட்டார் என்பது உறுதியாகிவிட்டது. அவரும் அதை தெரிவித்துவிட்டார்.
சூழல் இப்படி இருக்க அவரது நடிப்பில் கடைசியாக மாமன் திரைப்படம் வெளியானது. அதில் அவருடன் ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா, பாபா பாஸ்கர், ராஜ்கிரண் என பலர் நடித்திருந்தார்கள். சூரிதான் இப்படத்துக்கு கதை எழுதியிருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி படத்தின் கதை மீது சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் எழ ஆரம்பித்திருக்கின்றன.
இந்நிலயில் சூரி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
ஒரு திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல.. அது பலரின் கனவுகளும், உயிரோட்டமான உழைப்புகளும் சேர்ந்த ஒன்று. இந்த உரை என் திரைப்படத்துக்காக மட்டும் அல்ல. ஒவ்வொரு படத்திற்கும் பின்னால் நூற்றுக்கும் மேற்பட்டோரின் பணி, தியாகம், நம்பிக்கை, மற்றும் அக்கறை இருக்கின்றன.
ஒரு படம் உருவாகிறது என்றால், அது ஒரு குழந்தை பிறப்பதைப் போல. கதையிலிருந்து தொடங்கி, படப்பிடிப்பு, பின்னணி வேலை, தொகுப்பு, இசை, விளம்பரங்கள் என ஒவ்வொரு கட்டமும் உணர்வுகள் கலந்து மாறாத உறுதியுடன் கட்டியெழுப்பப்படுகிறது. ஒரு படம் வென்றாலும், தோற்றாலும்.. அது ஒரு பயணம். அந்த பயணத்தில் வலிகள், மகிழ்ச்சிகள், நம்பிக்கைகள் அனைத்தும் கலந்து இருக்கின்றன. இவ்வளவு முயற்சிக்குப் பிறகு, சிலர் இணையத்தில் திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து பார்த்துவிட்டு, அதை பெருமையாக பகிரும் போது, அது நம் உள்ளத்தை சிதைக்கிறது. அந்த ஒரு ‘வியூ’க்காக, யாரோ ஒருவரின் வருடங்கள் கொண்ட உழைப்பைக் கலைத்து விடுகிறோம்.
திரைப்படங்கள் மக்களை மகிழ்விப்பதற்காக மட்டுமல்ல, சில நேரங்களில் சமூகத்தில் முக்கியமான கருத்துக்களை எடுத்துரைக்கும் வழிமுறையாகவும் உருவாகின்றன. சில படம் யாரோ ஒருவரின் வாழ்க்கையின் பிரதிபலிப்பு. இத்தனை தன்னலமில்லாத உழைப்பை மதிக்காமல், திருட்டுப் பதிவிறக்கம் செய்வது சட்டவிரோதம் மட்டுமல்ல; மனிதநேயத்தையும் கைவிடும் செயல்.
எனவே என் பணிவான வேண்டுகோள்: திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள். திரைப்படங்களைச் சரியான வழியில் பார்த்து, அதை உருவாக்கியவர்களின் உழைப்புக்கு மரியாதை கொடுங்கள்.உங்கள் ஆதரவு தான் ஒரு படைப்பாளிக்கு மிகப்பெரிய விருது. நாம் ஒவ்வொருவரும் மாற்றத்திற்கான பொறுப்புடன் செயல்பட்டால், திரையுலகம் இன்னும் உயரலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.