ஈடிக்கும் பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டு முடிவில், ரூ.1,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் நிறுவன ஊழியர்கள், நிர்வாகிகள், சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், ரத்தீஷ் உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தப்பட்டது. இந்த சூழலில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்து வரும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இன்று மாலை பிரதமர் மோடியை பிரத்யேகமாகவும் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.
இதன் காரணமாக எதிர்க்கட்சிகள் அமலாக்கத்துறை ரெய்டுக்கு பயந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றிருப்பதாக விமர்சனங்கள் வைத்தன. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்யப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தோம். சுணக்கமாக நடந்து வரும் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில் விளையாட்டு வீரர்களுக்கு பயன்படும் வகையில் கபடி, பாக்ஸிங் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு சேர்த்து புதிய மல்டி ஸ்போர்ட்ஸ் மைதானப் பணிகள் டிசம்பர் மாதத்தில் முடியும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் நிதி உரிமையை கேட்பதற்காக டெல்லிக்கு சென்றுள்ளார். எதிர்க்கட்சியினர் அரசியல் செய்யத்தான் செய்வார்கள். ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறோம். ஈடிக்கு(ED) மட்டுமல்ல, மோடிக்கும் பயப்பட மாட்டோம். தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டே இருப்போம். மிரட்ட முயற்சித்தார்கள்.. மிரட்டி அடிபணிய வைப்பதற்கு திமுக அடிமை கட்சியல்ல. இது சுயமரியாதை கட்சி. தப்பு செய்கிறவர்கள் தான் பயப்பட வேண்டும், நாங்கள் யாருக்கும் பயப்பட தேவையில்லை. எதுவாக இருந்தாலும் சட்டப்பூர்வமாக சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.