மத்திய தொல்லியல் துறை அறிவியல் ஆய்வுகளை அரசியலாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழர்களின் தொன்மையான நாகரிகத்தை உலகறியச் செய்யும் கீழடி அகழாய்வு அறிக்கையை மறைப்பதற்கு மத்திய பாஜக அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் கடும் கண்டனத்திற்குரியவை. கீழடி அகழாய்வு, தமிழர்களின் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய நகர நாகரிகம், எழுத்தறிவு, வணிகம் மற்றும் கடல் தாண்டிய தொடர்புகளை வெளிப்படுத்திய மிக முக்கியமான தொல்லியல் கண்டுபிடிப்பாகும். இது தமிழர்களின் பண்பாட்டு மற்றும் வரலாற்று பெருமைகளை உறுதிப்படுத்தும் முதன்மையான ஆதாரமாக விளங்குகிறது. ஆனால், இந்த உண்மைகளை மறைத்து, தமிழர்களின் தொன்மையை இருட்டடிப்பு செய்யும் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் ஆழ்ந்த வேதனையளிக்கின்றன.
2014 முதல் கீழடியில் நடைபெறும் அகழாய்வு, தமிழர் நாகரிகம் கி.மு. 6-ம் நூற்றாண்டு வரை பின்னோக்கி செல்வதை நிரூபித்துள்ளது. இந்த ஆய்வை மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், 2023 ஜனவரியில் 982 பக்கங்களைக் கொண்ட விரிவான அறிக்கையை மத்திய தொல்லியல் துறைக்கு (ASI) சமர்ப்பித்தார். இருப்பினும், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அந்த அறிக்கையை வெளியிடாமல் மத்திய அரசு தாமதப்படுத்தி வருகிறது. மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, “விரைவில் வெளியிடப்படும்” என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால், இப்போது அறிக்கையில் “போதிய நம்பகத்தன்மை இல்லை” என்று கூறி, அதை திருத்தி மீண்டும் சமர்ப்பிக்குமாறு ஆய்வாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தமிழர்களின் வரலாற்றை மறைக்கும் ஒன்றிய பாஜக அரசின் அரசியல் உள்நோக்கத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறது.
கீழடி அகழாய்வு முடிவுகள், விவசாயம், கால்நடை பராமரிப்பு மட்டுமல்லாமல், கடல் தாண்டிய வணிகத்தில் ஈடுபட்டு உலகளாவிய தொடர்புகளைப் பேணியவர்கள் தமிழர்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன. இந்த முடிவுகள் தமிழ் மொழியின் தொன்மையையும், உலகின் பழமையான மொழிகளில் ஒன்றாக அதன் முக்கியத்துவத்தையும் பறைசாற்றுகின்றன. இருப்பினும், பன்முக கலாச்சாரத்தை அழித்து ஒற்றை கலாச்சாரத்தை திணிக்க முயலும் பாஜக அரசு, இந்த உண்மைகளை மறைக்க தொடர்ந்து தடைகளை ஏற்படுத்தி வருகிறது. அகழாய்வு நிதி ஒதுக்குவதில் தாமதம், ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை அஸ்ஸாமுக்கு மாற்றியது, மற்றும் அறிக்கையை திருத்த உத்தரவிட்டது ஆகியவை இதற்கு தெளிவான எடுத்துக்காட்டுகளாகும்.
கீழடி அகழாய்வு, தமிழர்களின் வரலாற்றை மறுவரையறை செய்யும் முக்கியமான கண்டுபிடிப்பாகும். இது கங்கை நாகரீகம் என்கிற வேத நாகரிகத்திற்கு முந்தைய தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உறுதிப்படுத்துகிறது. ஆனால், இந்த உண்மைகளை ஏற்க மறுக்கும் மத்திய பாஜக அரசு, தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தை அழிக்க முயல்கிறது. இது தமிழ் மக்களின் வரலாற்று உரிமைகளுக்கு எதிரான தாக்குதலாகும். மத்திய தொல்லியல் துறையின் இந்த நடவடிக்கைகள், அறிவியல் ஆய்வுகளை அரசியலாக்கி, தமிழர்களின் பெருமையை மறைக்கும் திட்டமிட்ட முயற்சிகளாகவே கருதப்பட வேண்டும்.
தமிழர்களின் வரலாற்று உண்மைகளை மறைக்கும் எந்த முயற்சியையும் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிடுவது, தமிழர்களின் பண்பாட்டு மற்றும் வரலாற்று பெருமைகளை உலகறியச் செய்யும் முக்கிய படியாக இருக்கும். எனவே, ஒன்றிய அரசு தனது அரசியல் உள்நோக்கங்களை கைவிட்டு, கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.