அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு கொலை மிரட்டல் கடிதம் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், கடிதம் அனுப்பியவரை கண்டறியாமல் அதை ஊடகங்களில் வெளியிட்டு விளம்பரப்படுத்தியது வருத்தமளிக்கிறது என வேலுமணி கூறியுள்ளார்.
அதிமுக தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி, கோவை சுகுணாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரின் வீட்டுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அதில், நீங்கள் சம்பாதித்த கருப்பு பணத்தில் எங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும்.
அப்படி கொடுக்காவிடில் வெடிகுண்டு வைத்து உங்களை கொலை செய்வோம். எங்களைப் பற்றி காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டாம். நாங்கள் சொல்லும் இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் பணத்தை பையில் வைத்து கொண்டு வரவேண்டும் என்று கூகுள் மேப்பில் மார்க் செய்து மர்ம நபர்கள் கடிதம் அனுப்பியிருந்தனர்.
இது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. அப்போது வேலுமணிக்கு பாதுகாப்பு வழங்கி, கடிதம் அனுப்பியவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், கோவை அதிமுக அலுவலகத்தில், 2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு எஸ்.பி வேலுமணி தலைமை தாங்கினார். இதில் கோவை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பூத் கமிட்டி பணிகளை துரிதப்படுத்த சொல்லி ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டத்துக்கு பிறகு எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவை மாநகராட்சி வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். அடிப்படை திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அதிமுக சார்பில் கோவையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
திமுக தமிழ்நாட்டுக்கு எந்த திட்டங்களையும் தரவில்லை. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் சிரமத்தில் உள்ளார்கள். கைத்தறி விசைத்தறி போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதற்கெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வந்தால் தான் மாற்றம் கிடைக்கும் என பொதுமக்கள் பலரும் கூறுகிறார்கள். மக்கள் திமுகவை புறக்கணிப்பார்கள்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக கெட்டுள்ளது. முதியவர்களை கொலை செய்து நகைகள் எடுத்து செல்லப்படுகின்றன. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது, கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் நாட்டிலேயே முதலிடம் பெற்றது. ஆனால், தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது.
எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடியார் முதலமைச்சராக இருக்கும் போது மத்திய அரசிடம் இருந்து அதிக நிதிகள் வாங்கப்பட்டன. மெட்ரோ திட்டம் வருவதற்கு ஜெயலலிதா காரணம். நான் அமைச்சராக இருக்கும் பொழுது மற்ற மாநிலங்களில் கட்டப்படாத வீடுகளை கூட இங்கு கட்டினோம். நடந்தாய் வாரி காவேரிக்கு நிதி வாங்கி தந்தவர் எடப்பாடியார்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டது. கோவையில் சாலைகள் குண்டும் குழியுமாய் உள்ளன. இதனால் மக்கள் அவதிப்படுவார்கள். கோவையில் எந்த நீர் நிலைகளும் தூர்வாரப்படவில்லை. அடிப்படை வசதிகள் செய்யவில்லை. இதுகுறித்து வருகிற திங்கள்கிழமை, கோவை மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளோம். கோவை மாநகராட்சியில் எந்த வேலையும் நடக்கவில்லை. வரி தான் உயர்ந்துள்ளது.
எனக்கு வந்த கொலை மிரட்டல் கடிதம் தொடர்பாக பொதுச்செயலாளர், மூத்த நிர்வாகிகள் அறிவுறுத்தல் அடிப்படையில் வழக்கறிஞர் அணி மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். அதை வைத்து கொலை மிரட்டல் விடுத்தவர்களை கண்டறியாமல், அதனை பத்திரிகை, தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்தியது மிகவும் வருத்தமளிக்கிறது. ஏதோ எனக்கு மட்டுமல்ல, இதுபோல யாருக்கு கொலை மிரட்டல் வந்தாலும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.