ஈடிக்கு பயமில்லையா.. அந்த தம்பிகள் லண்டனுக்கு ஓடியது ஏன்?:தமிழிசை!

அமலாக்கத்துறைக்கும் பயமில்லை, பிரதமர் மோடிக்கும் பயமில்லை என்றால், எதற்காக அந்த தம்பிகள் லண்டனுக்கும், அமெரிக்காவுக்கும் சென்றார்கள் என்று பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் முடிவில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன்பின் டாஸ்மாக் ஊழியர்கள், சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், உதயநிதி ஸ்டாலின் நண்பராக அறியப்படும் ரத்தீஷ் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் முடிவில் ஏராளமான தகவல்களை அமலாக்கத்துறை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. அதேபோல் விசாரணைக்கு ஆஜராகும்படி டாஸ்மாக் இயக்குநர்கள், ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் ரத்தீஷ் ஆகியோர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனிடையே ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் ரத்தீஷ் ஆகியோர் வெளிநாட்டிற்கு பறந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் எதிர்க்கட்சிகள் தரப்பில் யார் அந்த தம்பி என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அமலாக்கத்துறை விசாரணைக்கு பயந்து மு.க.ஸ்டாலின் டெல்லி பறந்ததாக எழுந்த விமர்சனங்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்திருந்தார். அதில், EDக்கும் பயமில்லை.. மோடிக்கும் பயமில்லை.. தப்பு செய்தவர்கள் தான் பயப்பட வேண்டும்.. நாங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை.. நாங்கள் அடிமை கட்சியல்ல என்று தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்த பதிலுக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். அதில் சென்னையில் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், EDக்கும் பயப்பட மாட்டேன்.. மோடிக்கும் பயப்பட மாட்டேன் என்றால்.. சம்பந்தப்பட்டவர்கள் ஏன் ஓடிப் போனார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் சொல்ல வேண்டும். ஏன் லண்டனுக்கு ஓடினார்கள்.. ஏன் அமெரிக்காவுக்கு ஓடினார்கள் என்று பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.