தமிழ்நாட்டில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி!

இன்றைக்கு எஸ்பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது, நாளை உங்களுக்கும் வரும், தமிழ்நாட்டில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு பொம்மை முதல்வர் இந்த நாட்டை ஆண்டு கொண்டு இருக்கிறார். திறமையற்ற முதலமைச்சர் இதை ஆண்டு கொண்டு இருக்கிறார். அதனால் சட்டம் – ஒழுங்கு மிக, மிக மோசமான நிலையில் இருந்து கொண்டு இருக்கிறது. இது தான் நாடறிந்த உண்மை. அரக்கோணத்தில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட அவல நிலை, அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் கூறுகிறார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அந்தப் பெண் கொடுத்த புகாரை அப்போதே எஃப்.ஐ.ஆர் ஆக பதிவு செய்து இருக்க வேண்டும். அந்த பெண் ஏழாம் தேதி புகார் கொடுத்து இருக்கிறார். அதை பத்தாம் தேதி தான் புகாராக பதிவு செய்கிறார்கள். அந்த புகார் தெய்வச் செயல் என்பவர் மீது கொடுக்கப்பட்டு இருக்கிறது. சாதாரண பிரிவின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அவர் நீதிமன்றத்தை அணுகுகிறார், அவருக்கு உடனே ஜாமீன் கிடைத்து விட்டது.

அந்தப் பெண் கொடுத்த புகாரை ஊடகம், பத்திரிகை என அனைத்திலும் வெளியிட்டு இருக்கிறார்கள். போலீசார் இந்த புகாரை ஒரு போதும் வெளியிட கூடாது. ஆனால் அந்தப் பெண் கொடுத்த புகாரை அப்படியே ஊடகத்திலும் பத்திரிகைகளிலும் வெளியிட்டு இருப்பதாக பேட்டி கொடுத்து இருக்கிறார். தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை ஆளுநரிடம் தெரிவிப்பதற்காக சென்னைக்கு சென்று உள்ளார். அங்கு இருக்கும் போலீசாருக்கு இது தெரிய வர ஆளுநரை சந்திக்க விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டு, அந்த பெண்ணையும் அவரது தாயாரையும் ஆட்டோவில் ஏற்றி வெளியே அனுப்பி விடுகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண் எனக்கு ஏற்பட்ட இந்த கொடுமை வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது என கூறி இருக்கிறார். அந்தப் பெண் மிகுந்த அச்சத்தோடு தன்னுடைய கொடுமையை ஊடகத்தின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். எவ்வளவு மோசமான ஆட்சி நடைபெற்று கொண்டு இருப்பதற்கு அரக்கோணமே சாட்சி.

அதேபோல கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியில், ஒரு பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்து உள்ளது. அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமையை, காவல்துறையே வெளியிடுகிறது. குற்றவாளிகள் இதில் முன் ஜாமீன் பெறுவதற்கு காவல் துறையே உதவி செய்கிறது. அதே போல இது சாதாரண குற்ற வழக்காக பதிவு செய்யப்படுகிறது. இதை கண்டித்து அதிமுக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறோம். அதேபோல இன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், ஒரு காப்பகத்தில் 21 வயது மதிக்கத்தக்க வாலிபர் அடித்து துன்புறுத்தி கொலை செய்து இருக்கிறார். இந்த செய்தியாக வெளிவந்து இருக்கிறது. இந்த ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கிறது. இனியாவது இந்த அரசு விழிப்போடு இருந்து மக்களை பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் வந்து இருப்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “தற்போது அவருக்கு வந்து இருக்கிறது. நாளை உங்களுக்கும் கூட வரலாம். இந்த ஆட்சியில் தான் பாதுகாப்பே இல்லையே.. அனைவரும் எச்சரிக்கையாக இருங்கள். இந்த ஆட்சியில் அரசியல் தலைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை, பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. ஒட்டுமொத்தமாக நாட்டுக்கே பாதுகாப்பு இல்லை, இந்த ஆட்சி இருக்கும் வரை சட்டம் ஒழுங்கு மிக மிக மோசமான நிலைக்குப் போய்விடும். எங்கு பார்த்தாலும் போதை கஞ்சா அடித்து விட்டு என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் செய்கிறார்கள். முதலில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். போதைப்பொருட்களை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும். நான் சொல்வதை அரசு செவி கொடுத்து கேட்டு இருந்தால், அப்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தால் இது போன்ற பிரச்சனைகள் வந்து இருக்காது. போதைக்கு அடிமையானவர்கள் இது போன்ற தவறான வழிகளில் சென்று கொலை, கொள்ளை, பாலியல் கொடுமை போன்றவைகளை செய்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.