பாஜக – அதிமுக கூட்டணி, திமுகவை விரட்டியடிக்கும். ஆட்சி முடியும் தருவாயில்தான் முதல்-அமைச்சர் டெல்லி சென்றுள்ளார் என எல்.முருகன் கூறினார்.
கோவை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:-
தமிழ்நாட்டில், ஒரு பினாமிகளின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. ஆட்சியை நடத்துவது முதலமைச்சரா அல்லது இந்த தம்பிகளா என்று கேள்விக்குறியாக உள்ளது. இந்த தம்பிகள் யார். அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார். அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு போடுமளவுக்கு எப்படி அதிகாரத்துடனும் தைரியத்துடனும் வலம் வருகிறார்கள். இவர்கள் தான் பவர் சென்டராக ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மறந்து, இந்த தம்பிகள் தமிழகத்தை சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார் என்று முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டிய நிதியை ஊழல் செய்து, அதைத் தங்களின் சுய லாபத்துக்கு பயன்படுத்துகிற தம்பிகளுக்கும், திமுக குடும்பத்துக்கும் என்ன தொடர்பு. அவர்களை இயக்குவது யார். அப்படி தொடர்பு இல்லை என்றால் முதலமைச்சர் அதை வெளியில் சொல்லி இருக்க வேண்டும். இவர்களை போல கிட்டத்தட்ட 15 தம்பிகள் இருக்கிறார்கள்.
உதயநிதி ஸ்டாலினும், திருமாவளவனும் புதுக்கோட்டையில் அம்பேத்கரின் சிலை திறந்து வைத்துள்ளனர். அது மிகவும் நல்லது. அங்கிருந்து அப்படியே சிறிது தூரம் பயணித்து வேங்கை வயல் சென்று மக்களை சந்திந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்போம். அரக்கோணம் பெண் வழக்கையும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் சார்கள் மற்றும் தம்பிகளின் ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு வெட்கப்பட வேண்டும். ஆட்சிக்கு வந்து கடந்த நான்கு வருடங்களாக டெல்லி பக்கமே செல்லாத முதலமைச்சர், தற்போது டெல்லி சென்றுள்ளார். ஆட்சி முடியும் கடைசி நேரத்தில் அரசியல் செய்வதற்காகவே டெல்லி சென்றுள்ளனர். தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு பற்றிய கவலை இல்லை. இவர்களின் மோசமான செயல்பட்டால் அனைத்தும் கைத்தவறி சென்றுவிட்டது. நம் மாநிலத்தின் வருமானம், வளர்ச்சி அனைத்தும் போய்விட்டது. பாஜக அதிமுக கூட்டணி திமுக என்கிற ஊழல் பெருச்சாளியை விரட்டி அடிக்கும்.
தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம், தமிழ் மக்கள் மீது அதீத பற்று கொண்டவர் பிரதமர் நரேந்திர மோடி. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ரூ.12 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளனர். குறிப்பாக விமான நிலையங்களுக்கு எவ்வளவு பணம் ஒதுக்கி இருக்கிறார்கள் என யோசித்துப் பாருங்கள். ஐநா சபையில் யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று கூறிய ஒரே பிரதமர் நரேந்திர மோடி தான். தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சியடைய மத்திய அரசு ஒதுக்கிய நிதி தான் காரணம். உதயநிதி சொல்வதை போல நாங்கள் யாரையும் அடிபணிய வைக்க அவசியம் இல்லை. பாஜக உலகத்திலேயே மிகப்பெரிய கட்சி. பிரதமர் மூன்றாவது முறையாக வரலாற்று சிறப்பு மிக்க ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். அதனால் நாங்கள் யாரையும் மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.