தமிழர்களின் வரலாற்றை மறைக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசு: திமுக கண்டனம்!

மத்திய அரசு கீழடி அகழாய்வு தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிடுவதில் தாமதம் செய்து தற்போது திருத்தம் கோரியுள்ளது. தமிழர்களுக்கு என்று தொன்மையும் வரலாறும் இருக்கிறது என்பதை ஏற்க முடியாமல் தமிழர்களின் வரலாறை மறைக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்து திருச்சியில் நடைபெற்ற திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கீழடியின் முதல் 2 அகழாய்வு ஆய்வறிக்கையை இந்திய தொல்லியல் துறை இதுவரை வெளியிடவில்லை. கீழடி அகழாய்வு தொடா்பான அறிக்கையில் திருத்தங்கள் செய்து, அதனுடைய நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்துமாறு இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தொல்லியல் துறையின் இந்த நடவடிக்கைக்கு தமிழகத்தில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், திருச்சியில் தி.மு.க. இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்தில், கீழடி அகழாய்வு ஆய்வறிக்கையில் திருத்தம் கோரி தமிழர்களின் வரலாற்றை மறைக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தி.மு.க. இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாநில நிர்வாகிகள் என 600 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலுக்காக பணியாற்றி மீண்டும் திமுகவை ஆட்சி பொறுப்பில் அமர்த்துவது, இளைஞரணி சார்பில் செய்ய வேண்டிய களப் பணிகள், திமுக அரசின் சாதனைகளை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் மக்களிடம் கொண்டு செல்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் பகல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும், ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர்களின் வரம்புகள் தொடர்பாக மாநில உரிமைகளுக்கான மைல்கல்லாக அமைந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் குடியரசுத் தலைவரையும், துணை குடியரசுத் தலைவரையும் பயன்படுத்தும் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் குறுக்கு வழியை நாடும் கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமான சக்திகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

கீழடி அகழாய்வு தொடர்பாக 2023 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட ஆய்வறிக்கையை வெளியிட தாமதப்படுத்திவிட்டு தற்போது அந்த அறிக்கையில் திருத்தம் கோரியுள்ளது. தமிழர்களுக்கு என்று தொன்மையும் வரலாறும் இருக்கிறது என்பதை ஏற்க முடியாமல் தமிழர்களின் வரலாறை மறைக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் மற்றும் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.