பாகிஸ்தானுக்கு 2015-ல் கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டது: சசி தரூர்!

‘‘தீவிரவாத தாக்குதல் மீது நடவடிக்கை எடுக்க, பாகிஸ்தானுக்கு கடந்த 2015-ல் இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டது’’ என பதன்கோட் தாக்குதலை அமெரிக்காவில் இந்திய குழுவுக்கு தலைமை தாங்கிய காங்கிரஸ் எம்.பி சசிதரூர் நினைவுபடுத்தினார்.

பகல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மற்றும் விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. 4 நாட்களாக நடைபெற்ற போர் கடந்த 10-ம் தேதி முடிவுக்கு வந்தது. இதையடுத்து சர்வதேச தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுடன் தொடர்புடைய நாடுகளிடம் தெரிவிக்க அனைத்து கட்சிகளையும் சேர்ந்த எம்.பி.க்கள் குழுவை மத்திய அரசு அனுப்பியது.

காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தலைமையிலான குழு தற்போது அமெரிக்கா சென்று அங்குள்ள அரசு உயர் அதிகாரிகள், எம்.பி.க்கள், வெளியுறவு கொள்கை நிபுணர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவித்து வருகிறது.

அமெரிக்கா சென்ற இந்திய குழுவினர் நியூயார்க்கில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட செப்டம்பர் 11 தீவிரவாத தாக்குதல் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது. அதன்பின் அவர்கள் இந்திய துணை தூதரகத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது சிசிதரூர் பேசியதாவது:-

தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும், தீவிரவாதிகளுக்கு புகலிடம் அழிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது என்ற இந்தியாவின் ஒருமித்த கருத்தை தெரிவிப்பதற்காக நாங்கள் செப்டம்பர் 11 நினைவிடத்தில் இருந்து எங்கள் பயணத்தை தொடங்கியுள்ளோம்.

கடந்த 2015-ம் ஆண்டு இந்தியாவின் பதன்கோட் விமானப்படை தளம் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு முதல் மாதத்தில்தான் எங்கள் பிரதமர் பாகிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்டு அமைதிக் கரம் நீட்டினார். இந்த தாக்குதல் அவருக்கு அதிர்ச்சியை அளித்தது. இந்த தாக்குதல் குறித்த விசாரணையில் பாகிஸ்தான் இணைய வேண்டும் என பாக். பிரதமருக்கு, பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். பாகிஸ்தான் குழுவினர் இந்தியா வந்து ஆய்வு செய்தபின் பாகிஸ்தான் திரும்பி சென்றனர். இந்த தாக்குதலை இந்தியர்களே நடத்தியதாக அவர்கள் கூறினர். தீவிரவாதத்தின் மீது நடவடிக்கை எடுக்க கடந்த 2015-ல் பாகிஸ்தானுக்கு கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

மும்பை தீவிரவாத தாக்குதலில் 150 பேர் கொல்லப்பட்டனர். இதில் பங்கேற்ற தீவிரவாதிகள் ஒவ்வொரு நிமிடமும் பாகிஸ்தானிலிருந்து உத்தரவுகளை பெற்று செயல்பட்டனர். அமெரிக்காவில் நடைபெற்ற செப்டம்பர் 11 தீவிரதாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஒசாமா பின்லேடன் எங்கிருக்கிறார் என தங்களுக்கு தெரியாது என பாகிஸ்தான் கூறியது. ஆனால் அவர் பாகிஸ்தானில் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள இடத்துக்கு அருகே பாதுகாப்பான இடத்தில் இருந்தார். அதை அமெரிக்கா கண்டுபிடித்து ‘ஆபரேசன் நெப்டியூன் ஸ்பியர்’ நடவடிக்கை மூலம் ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்றது. இதுதான் பாகிஸ்தான்.

அதனால்தான் பகல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தற்போது வித்தியாசமாக பதிலடி கொடுத்துள்ளது. கடந்த 7-ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினோம். பாகிஸ்தானின் நடவடிக்கை குறித்து நாங்கள் ஐ.நா.வில் புகார் தெரிவித்தோம். ஆனால், அதை பாகிஸ்தான் மறுத்தது. தீவிர விசாரணை நடத்தப்படவில்லை. தீவிரவாத கட்டமைப்பை ஒழிக்க எந்த முயற்சியையும் பாகிஸ்தான் எடுக்கவில்லை. தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து புகலிடம் அளித்து வந்தது. பாகிஸ்தான் இவ்வாறு செய்தால், ஆபரேஷன் சிந்தூர் போன்ற நடவடிக்கையைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும். இவ்வாறு சசிதரூர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான அனைத்து கட்சி குழுவினர், கயானா நாட்டிற்கு சென்று சேர்ந்தனர். அவர்களை இந்திய வம்சாவளியினர் சிறப்பாக வரவேற்றனர். இதுபற்றி செய்தியாளர்களிடம் அவர்கள் பேசும்போது, இந்த பயங்கரவாதத்திற்கு கயானாவில் உள்ள நாங்கள் அனைவரும் கண்டனம் தெரிவிக்கிறோம்.

இந்திய குடிமக்களுக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம். அவர்களுக்கு எங்களுடைய இரங்கல்கள். பாகிஸ்தானின் இந்த பயங்கரவாத செயலுக்கு எதிரான பிரதமர் மோடியின் இந்த கடுமையான அணுகுமுறைக்கும் அவருடைய ஒவ்வொரு நடவடிக்கைக்கும் நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம் என்றனர்.

இந்நிலையில் கயானாவில், அந்நாட்டின் துணை ஜனாதிபதி பாரத் ஜக்தியோவை, சசி தரூர் தலைமையிலான அனைத்து கட்சி குழுவினர் நேரில் சந்தித்து பேசினர். இதன்பின்னர் ஜார்ஜ் டவுனில் செய்தியாளர்களிடம் இன்று காலை பேசிய சசி தரூர், இது ஓர் உன்னத சந்திப்பு. துணை ஜனாதிபதி ஜக்தியோ நம்முடைய நாட்டின் நண்பர். அண்டை நாட்டுடனான (பாகிஸ்தான்) சமீபத்திய நிகழ்வுகளில் நம்முடைய நிலையை பற்றி பெரிய அளவில் அவருக்கு புரிதல் உள்ளது. கயானாவின் வளர்ச்சி பற்றியும் விரிவான அளவில் நாங்கள் உரையாடினோம்.

அதில், இந்தியாவின் பங்கு இருப்பதற்கான சூழல் பற்றியும் பேசினோம் என்றார். தொடர்ந்து அவர், கயானாவில் மிக பெரிய அளவில் விரிவாக்க பணிகள் நடந்துள்ளன. எண்ணெய் மற்றும் எரிவாயு கண்டறியப்பட்டு உள்ளது. அவற்றை கொண்டு உட்கட்டமைப்பு மாற்றங்களை செய்திருக்கின்றனர். இந்த செயல்முறையில் பங்கேற்க இந்தியாவும், இந்தியர்களும் வரவேற்கப்படுகின்றனர். அதற்கான தெளிவான அனுமதியும் அளிக்கப்பட்டு உள்ளது. இந்திய தொழிலாளர்களும் அதற்கான பணியில் பங்கேற்று வருகின்றனர் என கூறியுள்ளார்.

நம்முடைய நிலைப்பாட்டை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாங்கள் வந்தோம். அந்த பணி நிறைவடைந்து விட்டது. அவர்கள் நம்மை புரிந்து கொண்டனர். அதுதவிர இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை பற்றியும் விரிவான அளவில் நாங்கள் பேசினோம் என்று அவர் கூறியுள்ளார்.