எடப்பாடியார் எனும் பொக்கிஷத்தை பாதுகாக்க Z+ பாதுகாப்பு வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்!

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தியுள்ளார். உதயகுமார், எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும், இதனால் அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார், “புரட்சி தமிழர் ஐயா எடப்பாடியார் அவர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், ‘அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வருவதுமில்லை’ என்ற அப்பர் திருமொழிக்கு ஏற்ப, அவர் எந்த மிரட்டலையும் பொருட்படுத்தாமல், மக்களுக்காக உழைத்து வருகிறார். மக்களுக்காகவே தனது உயிரை அர்ப்பணிக்கும் உத்தமரான எடப்பாடியைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தொண்டருக்கும், ஒவ்வொரு தமிழருக்கும் இருக்கிறது,” என்று உதயகுமார் தெரிவித்தார். மேலும், இரண்டு கோடி அதிமுக தொண்டர்களின் வேண்டுகோளாகவும், அவர்களின் மனக்குமுறலாகவும் இதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“அந்த பொக்கிஷத்தை பாதுகாக்க வேண்டும். அந்த வகையில் மத்திய அரசு, மாநில அரசு அதை பரிசீலனை செய்து, அவருக்கு Z+ பாதுகாப்பு பிரிவு பாதுகாப்பு கொடுப்பதற்கு முன்வர வேண்டும் என்பதை, தொண்டர்களின் மனக்குமுறலாகவும், தொண்டர்களின் வேண்டுகோளாகவும் அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்,” என்று உதயகுமார் தெரிவித்தார். மேலும், இரண்டு கோடி அதிமுக தொண்டர்களின் பிரதிநிதியாக, “நானும் ஒருவன்” என்ற அடிப்படையில் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.