10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 3 கட்டங்களாக ஊக்கத்தொகையினை தவெக தலைவரும் நடிகருமான விஜய் வழங்குகிறார்.
முதல்கட்டமாக மே 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, மாமல்லபுரத்தில் 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஹோட்டலில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. பொதுத் தோ்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்களை விஜய் வழங்குகிறார்.
இது குறித்து தவெக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானதை அனைவரும் அறிவீர்கள். இந்தப் பொதுத் தேர்வுகளில் தொகுதி வாரியாகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்களைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் நேரில் அழைத்துப் பாராட்ட உள்ளார்.
முதற்கட்டமாக 30.05.2025 வெள்ளிக்கிழமை அன்று, மாமல்லபுரத்தில் 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஹோட்டலில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. இந்தப் பாராட்டு விழாவில், அரியலூர், ராணிப்பேட்டை, கடலூர் உள்ளிட்ட குறிப்பிடப்பட்டுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள். இந்தப் பாராட்டு விழாவில் மாணவச் செல்வங்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்கிக் கௌரவிக்க உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.