எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்து என் தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியைப் பற்றி குறை கூறுவதற்காக அரைத்த மாவையே எடப்பாடி பழனிசாமி அரைத்து வருவதாக விமர்சித்த மு.க.ஸ்டாலின், டெல்லிக்கு வெள்ளைக் கொடியோ, அவரைப் போல் காவிக் கொடியோ கொண்டு செல்லவில்லை என்றும் பதில் அளித்துள்ளார்.
கடந்த வாரம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமலாக்கத்துறை ரெய்டு காரணமாகவே மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு வெள்ளைக் கொடியுடன் சென்றார் எனவும், 3 ஆண்டுகளாக ஏன் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் விமர்சித்தார். இந்த விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையில் காரசார வாதம் நடந்து வந்தது. திமுக தரப்பில், உங்களை போல் 3 கார்கள் மாறி முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு செல்லவில்லை என்றும் பதிலடி கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். திட்டங்களை தொடங்கிய ஸ்டாலின் கொளத்தூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக ரூ.22.61 கோடி மதிப்பீட்டில் முதியோர் சிறப்பு இல்லத்தை திறந்து வைத்த அவர், மூத்த குடிமக்களுக்கான 3 உறைவிடங்கள் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதேபோல் பொதுத் தேர்தல் சாதித்த மாணவ மாணவியருக்கு பரிசுகளை அளித்தார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
திமுக ஆட்சியை பற்றி சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு எதுவும் கிடைக்கவில்லை. அதனால் அவர் அரைத்த மாவையே அரைத்து கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. அவருக்கு பதில் அளித்து எனது தரத்தை தாழ்த்தி கொள்ள விரும்பவில்லை. கொள்ளையடித்த அதிமுக ஆட்சி டெல்லிக்கு வெள்ளைக் கொடியும் கொண்டு செல்லவில்லை. அவரிடம் உள்ள காவிக் கொடியும் கொண்டு செல்லவில்லை என்று ஏற்கனவே கூறிவிட்டேன் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அரக்கோணம் பாலியல் புகார் தொடர்பான எடப்பாடி பழனிசாமி விமர்சனம் குறித்த கேள்விக்கு, கொள்ளையடித்த கட்சியான அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம், தூத்துக்குடி என ஏராளமான சம்பவங்கள் நடந்துள்ளன. எடப்பாடி பழனிசாமி வீம்புக்கு பேசி கொண்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.