மதுரையில் போலி பாஸ்போர்ட் வழங்கிய விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடித எழுத உள்ளதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-
தி.முக., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், பொது மக்களிடம் மோசமாக நடந்து கொள்கின்றனர். தற்போது, விருதுநகரில் மனு கொடுக்க வந்த ஏழை தாயை, வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன், அவர் அளித்த மனுவை வைத்தே தலையில் ஓங்கி அடித்துள்ளார். இந்த வீடியோவை பா.ஜ., வெளியிட்ட பின், அமைச்சரின் ஆட்கள், அந்த பெண்ணைச் சமாதனப்படுத்தி உள்ளனர். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, அவர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.
கவர்னர் ரவி, சனாதனத்தை பற்றி பேசுவதில் என்ன தவறு இருக்கிறது? ஆளும் கட்சி அமைச்சர்கள், திராவிட மாடல் அரசு என்று பேசுவதை, அரசியலாக பார்க்காமல் கவர்னர் பேசுவதை மட்டும் ஏன் அரசியலாக பார்க்க வேண்டும்? மதுரை காமராஜ் பல்கலை பட்டமளிப்பு விவகாரத்தில் கவர்னர் ரவியை, அமைச்சர் பொன்முடி சாடியுள்ளார். தமிழகத்தையும், டெல்லியையும் இணைக்கும் நபராக, மத்திய இணை அமைச்சர் முருகன் உள்ளார். அவர், தமிழகத்தில் நடக்கும் எந்த விழாவிலும் பங்கேற்க உரிமை உண்டு.
தமிழக உளவுத்துறை தலைவராக இருப்பவர் ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம். முதல்வருக்கு தவறான தகவலை கொடுத்து, சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதற்கு, உளவுத் துறை ஒரு காரணமாக உள்ளது. உளவு துறையில் முக்கிய இடங்களில் குறிப்பிட்ட மதத்தினரை பணியில் நியமித்து, மதச்சாயம் பூசப்பட்டு வருகிறது. டேவிட்சன் தேவாசீர்வாதம், 2018 ஜூனில் மதுரை கமிஷனராக பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்று, 13 மாதங்களுக்கு பின், திருச்சியில் இருந்து இலங்கை செல்ல முயன்ற ஒருவரின் பாஸ்போர்ட் போலி என்று கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பல போலி பாஸ்போர்ட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பின், 2019 செப்டம்பரில், ‘மதுரையில் சில அதிகாரிகள் தங்களின் பதவியை முறைகேடாக பயன்படுத்தி, 200க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட் கொடுத்துள்ளனர்’ என, ‘கியூ’ பிரிவு போலீஸ் ஒத்துக் கொண்டது. மதுரை, அவனியாபுரத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் மட்டும், 72 போலி பாஸ்போர்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அம்மாவட்டத்தில் மீதி உள்ள காவல் நிலையங்களில், 128 போலி பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. பின், போலி பாஸ்போர்ட் குறித்து தானாகவே வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டது; மேல் நடவடிக்கை இல்லை. இதுதொடர்பாக, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், ‘வழக்கை ஏன் சி.பி.ஐ.,க்கு ஏன் மாற்ற கூடாது?’ என, கேள்வி எழுப்பியது; வேகமாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.
பின், ‘கியூ’ பிரிவு டி.ஐ.ஜி., ஈஸ்வரமூர்த்தி விசாரணை மேற்கொள்கிறார். மதுரை அவனியாபுரம் இன்ஸ்பெக்டர், கமிஷனர் அலுவலகத்தில் உள்ள உளவு துறை இன்ஸ்பெக்டர், உதவி ஆணையர், ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்று டி.ஜி.பி.,க்கு அனுமதி கேட்டு, அவர் கடிதம் அனுப்பினார். அதை அவர் உள்துறை செயலருக்கு அனுப்பினார். இதேபோல், பாஸ்போர்ட், அஞ்சல் துறையில் உள்ள அதிகாரிகளை விசாரிக்க கோரி கடிதம் அனுப்பினார். அதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு மட்டும் அனுமதி தரவில்லை. அவனியாபுரத்தில் இருந்த ஆவணங்களை அழித்து விட்டனர். இதுதொடர்பான ஆவணங்கள், மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் உள்ளன. நீதிமன்றம் கூறியும் ஒன்றரை ஆண்டுகளாகியும் விசாரணை செய்யவில்லை. போலி பாஸ்போர்ட் விவகாரத்தில், தற்போதைய உளவு துறை ஏ.டி.ஜி.பி.,க்கு பொறுப்பு உள்ளது. இதனால் விசாரணையில் தாமதம் செய்யப்படுகிறது.
சென்னை, நெற்குன்றம், பெருமாள் கோவில் தெருவில், மூன்று மாடி கட்டடத்தில் போலி பாஸ்போர்ட் வழங்கியது, பணம் பரிமாற்றம் போன்ற பணிகள் நடந்தன. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதும், அந்நிறுவனத்தை துவக்கியவர்கள், அதை மூடினர். அவர்களிடம் இருந்து வாடகை பெற்று தருமாறு, கட்டட உரிமையாளர் புகார் பதிவு செய்துள்ளார்; ஆனால், விசாரணை செய்யவில்லை. போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., மற்றும் தேசிய புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, தமிழக பா.ஜ., சார்பில் கவர்னருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் கடித எழுத உள்ளோம். போலி பாஸ்போர்ட் விவகாரத்தில், சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர், மதுரை கமிஷனராக இருந்தவர் உட்பட அனைவரும் விசாரணை முடியும் வரை பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
யாரை காப்பாற்றுவதற்காக, போலி பாஸ்போர்ட் விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது? எதற்காக காவல் துறை மந்தமாக செயல்படுகிறது? போலி பாஸ்போர்ட், பிரிவினைவாத பேச்சு உட்பட இந்திய இறையான்மைக்கு எதிராக செயல்படுவர் யாராக இருந்தாலும், அவர்களை விடக் கூடாது.
ஒரு கட்சிக்குள் பிரச்னை இருப்பது வழக்கம். பா.ஜ.,வை பொறுத்தவரை கூட்டணி என்பது, ஒரு கட்சியுடன் தான் இருக்கும். அ.தி.மு.க., செயற்குழு, பொதுக்குழு கூடி, கட்சி சட்ட விதிகளின் படி ஒரு தலைவரை தேர்வு செய்திருக்கின்றனர்.பா.ஜ., தலைமை, அந்த தலைமையுடன் கூட்டணி வைக்கும். எனவே, இடைக்கால பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்ட பழனிசாமிக்கு, தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தேன். பழனிசாமியா, பன்னீர்செல்வமா என்ற விவகாரத்திற்குள் செல்ல விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.