இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இன்று (ஜூன் 2) பிறந்தநாள். இன்று காலை முதலே அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் இசைஞானி இளையராஜாவுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “நாட்டுப்புற இசை, மெல்லிசை, துள்ளலிசை, மரபிசை, தமிழிசை, மேற்கத்திய இசை என அனைத்திலும் கரைகண்டு தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் இசைஞானி இளையராஜாவுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
தங்களின் சிம்பொனி இசை தமிழ்நாட்டில் ஒலிக்கவுள்ள ஆகஸ்ட் 2-ஆம் நாளுக்காகக் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன். நேற்றும் இன்றும் என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இளையராஜாவை தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு, முதல்வர் தனது பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டார்.