பார்லிமென்டில் குறிப்பிட்ட சில வார்த்தைகளை பயன்படுத்த எம்.பி.,க்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், ‛மிஸ்டர் ஹிட்லர் இது ஜெர்மனி அல்ல’ என விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டது. அதன்படி, வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு, கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி ஆகிய வார்த்தைகள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும், இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, கிரிமினல், முதலை கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்ல, முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், லாலிபாப், பாப்கட் ஆகியவை பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
மிஸ்டர் ஹிட்லர் இது ஜெர்மனி அல்ல. மன்னராட்சி முறையை கொண்டுவரத் துடிக்கிறீர்களா? பார்லி.,யின் இரு அவைகளிலும் ஊழல், நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சர்வாதிகாரம், வெட்கக்கேடு, துரோகம் செய்தார், வாய்ஜாலம் காட்டுபவர், அழிவு சக்தி, சர்வாதிகாரி உள்ளிட்ட வார்த்தைகளை எல்லாம் தடை செய்யப்பட்ட வார்த்தைகள் என்று பட்டியலிட்டு, லோக்சபா செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த வார்த்தைகளை எம்.பி.,க்கள் பயன்படுத்தினால், அவைக்குறிப்பில் இருந்து நீக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பேச்சுரிமைக்கு எதிரான இந்நடவடிக்கை, ஜனநாயக குரல்வளையை நசுக்கும். தவறுகளை சுட்டிக்காட்டவோ, விமர்சனம் செய்யவோ இடமளிக்காதது குடியரசையும், அரசியலமைப்பையும் கேலிக்கூத்தாக்கும். பிரதமர், அமைச்சர்களுக்கு எதிராக யாரும் பேசக்கூடாது என்று கருதுவது ஆபத்தானது. பாராட்டுகளை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்க மன்னராட்சி முறை நடக்கிறதா? திருவள்ளுவரைப் பற்றிப் பேசும் பிரதமருக்கு ‛இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்’ கதியை சுட்டிக்காட்ட யாருமில்லையா? ஹிட்லராக மாற இது ஜெர்மனி அல்ல. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.