நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கில் கடந்த 2019 ஜனவரிக்கு முன்னர் முழு நுழைவு வரியை செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்கக் கூடாது. மேலும், 2019 ஜனவரிக்கு பின்னும் வரியை முழுமையாக செலுத்தாமல் இருந்தால் அபராதம் விதிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நடிகா் விஜய், கடந்த 2012-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தாா். இதற்கு தமிழக அரசு விதித்த நுழைவு வரியை எதிா்த்து, அவா் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு நீண்ட காலம் நிலுவையில் இருந்தது வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கை தள்ளுபடி செய்ததுடன், நடிகா் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தாா். வரி செலுத்தாமல் வழக்குத் தொடா்ந்த அவரது செயலுக்கு கடும் கண்டனத்தையும் நீதிபதி தனது தீா்ப்பில் பதிவு செய்தாா். இதை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் நடிகா் விஜய் மேல்முறையீடு செய்தாா். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி தலைமையிலான அமா்வு, தனி நீதிபதி தீா்ப்புக்குத் தடை விதித்தது.
இதனிடையே வரி மற்றும் அபராதத்தொகை இரண்டும் சேர்த்து செலுத்தவேண்டும் என வணிகவரித்துறை நடிகர் விஜய்க்கு உத்தரவிட்டது. நுழைவுவரி தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால், வரி செலுத்த காலதாமானது என விளக்கமளித்து அபராதத் தொகையை ரத்துசெய்யவேண்டும் என்று நடிகர் விஜய் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. வணிக வரித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்குகளின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் கடந்த மார்ச் 14ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இன்று இந்த வழக்கு நீதிபதி சுரேஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த 2019 ஜனவரிக்கு முன்னர் முழு நுழைவு வரியை செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்கக் கூடாது. மேலும், 2019 ஜனவரிக்கு பின்னும் வரியை முழுமையாக செலுத்தாமல் இருந்தால் அபராதம் விதிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.