தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சியை பாமக தான் அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தி நகரில் உள்ள கமாராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பசியோடு மாணவர்கள் படிக்க முடியாது என்று மத்திய உணவு திட்டம் கொண்டு வந்தனர். நீர் மேலாண்மை புரட்சி, தொழிற்சாலைகளை கொண்டு வந்து தொழில் புரட்சி செய்தவர் காமராஜர். அவரது 120 வது பிறந்தநாளை மாலை அணிவித்து மரியாதை செய்வது எங்களுக்கு பெருமை. பாமக காமராஜர் ஆட்சியை கொண்டு வரும். அடுத்த 10, 15 ஆண்டுகளில் கூட்டணியின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது. 2026 ல் பாமக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். அரசியல் சூழல் மாறிகொண்டே இருக்கு. சூழலுக்கு ஏற்ப கூட்டணி அமையும்.
சென்னை விமான நிலைய பெயர் பலகையில் காமராசர் பெயர் இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் பாமக போராட்டம் நடத்தும். மாநில நெடுஞ்சாலைகளில் காமராஜர் பெயரில் வளைவுகள் அமைக்கப்பட்டன. மீண்டும் காமராஜர் பெயரில் அந்த வளைவுகளை அரசு அமைக்க வேண்டும்.
அதிமுக விவகாரம் முழுக்க அவர்களது உட்கட்சி பிரச்சனை அதுகுறித்து கருத்து கூற முடியாது. அதிமுக கடந்த மாதம் வேறு விதமாக இருந்தது இன்று வேறு விதமாக இருக்கிறது.
நீர் மேலான்மை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து சில முடிவுகளை எடுக்க வேண்டும். தடுப்பணைகள் நிறைய கட்ட வேண்டும். ஒரு டி எம் சி கொள்ளளவு கொண்ட 10 ஏரிகளை சென்னை நகரை சுற்றி அமைக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளால் மட்டுமே காலநிலை மாற்றத்திலிருந்து தற்காத்து கொள்ள முடியும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.