எது தாழ்த்தப்பட்ட சாதி? என தேர்வு வினாத்தாளில் இடம் பெற்றதற்கு பெரியார் பல்கலைக்கழகத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட முதுகலை வரலாறு இரண்டாம் பருவத் தேர்வில் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற வினா எழுப்பப்பட்டு, அதற்கு மகர்கள், நாடார்கள், ஈழவர்கள், ஹரிஜன்கள் ஆகியவற்றிலிருந்து ஒன்றை தேர்வு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. வினாத்தாள் வெளியிலிருந்து பெறப்பட்டது தான் இந்த தவறுக்கு காரணம் என துணைவேந்தர் கூறுவது இந்த குற்றத்தை மூடி மறைக்கும் செயல். வினாத்தாளை பல்கலை. நிர்வாகம் சரிபார்த்திருக்க வேண்டும். அத்தகைய நடைமுறை பெரியார் பல்கலை.யில் இருக்கும் போது இந்த குற்றம் எப்படி நடந்தது?
சாதிக் கொடுமைகளுக்கு எதிராக போராடிய பெரியார் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தில் இக்கொடுமை நடந்திருப்பதை மன்னிக்க முடியாது. வினாத்தாள் தயாரித்தவர்கள், அதை சரிபார்க்கத் தவறியவர்கள், பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளிட்ட அனைவர் மீதும் விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வைத்த குற்றச்சாட்டில், மக்களே பாரீர், ‘பெரியாரின்’ பெயரை தாங்கி நிற்கும் பல்கலைக்கழகத்திலேயே மாணவர்களிடத்தில், பெரியாரின் கொள்கைகளை கொச்சைப்படுத்தியும், சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவித்தும் செமஸ்டர்தேர்வு வினாத்தாளில் கேள்விகள் கேட்டிருப்பதுதான் விடியா அரசின் திராவிட மாடலா? இதுதான் திமுகவின் சமூகநீதியா?, என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்த நிலையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த வினாவிற்கு காரணமானவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உயர் கல்வித்துறை இதில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் போராடுவோம். திராவிடர் கழகம் சார்பாக போராட்டம் நடத்தப்படும். இதற்கு காரணமான நபர்கள் மீது உயர் கல்வித்துறை அமைச்சகம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி பெரியார் பல்கலையில் தலை தூக்க தொடங்கி உள்ளது. அங்கு சாதி வன்மம் படமெடுத்து ஆடிக்கொண்டு இருக்கிறது. பெரியார் பல்கலைக்கழகம் காவிமயமாகிக் கொண்டிருக்கிறது. இதை தடுக்க வேண்டும், என்று கி வீரமணி குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இது போன்ற செயலால் மோசமான வார்த்தைகளால் திட்ட தோன்றுகிறது என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ஜாதி ஒழிப்பிற்காக போராடிய பெரியார் பெயரில் இயங்கும் பல்கலைகழகத்தில் இது போன்ற கேள்விகள் கேட்டிருப்பவரை மோசமான வார்த்தைகளில் திட்ட தோன்றுகிறது. அந்த கேள்வி கேட்டவர்களை பல்கலைகழகத்தில் இருந்து நீக்கி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.