பிகாரில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது!

பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்தவும், 2047க்குள் இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்றவும் இலக்கு நிர்ணயித்து இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வந்த பயங்கரவாதிகள் இருவரை பிகார் போலீசார் கைது செய்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12ம் தேதி பிகார் சென்றார். அப்போது பிரதமர் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுப் பிரிவு தகவல் தெரிவித்தது. இதன் அடிப்படையில் பிகார் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், பாட்னாவில் உள்ள புல்வாரி ஷரீப் என்ற இடத்தில், பிரதமர் மீதான தாக்குதல் குறித்து கடந்த 6, 7ம் தேதிகளில் சதித் திட்டம் தீட்டப்பட்டதாகவும், அங்கு பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தகவல் கிடைத்தது. உடனே அப்பகுதியில் கடந்த 11ல், போலீசார் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதில் ஓர் ஆவணத்தில், ‘2047ல் இஸ்லாமிய ஆட்சியை நோக்கி இந்தியா’ எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்பின் துண்டு பிரசுரங்களும் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, அதார் பர்வேஸ், முகமது ஜலாலுதீன் என்ற இரு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இதில், ஜலாலுதீன் ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது தெரியவந்தது. இவருக்கு, ‘சிமி’ மாணவர் அமைப்புடனும் தொடர்பு உள்ளது. இருவருமே, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்.

பாட்னாவின் புல்வாரி ஷரீப் பகுதியில் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இவர்கள் ஆயுத பயிற்சி அளிக்கின்றனர். தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநில இளைஞர்கள் இங்கு அதிக அளவில் வந்து வசித்து பயிற்சி பெறுவதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இந்த வழக்கை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமையும் விசாரித்து வருகிறது. மூன்றாவது பயங்கரவாதியை இவர்கள் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.