ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்தாக 4 பேர் கைது!

கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் சேர்த்தாக நான்கு பேரைத் தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டில் கோவை மாவட்டத்தில் கோட்டை ஈஸ்வரர் கோயில் அருகே திடீரென கார் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேசா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தீவிரவாத தாக்குதலாக இருக்கும் என சந்தேகிக்கப்பட்டதால் அப்போதே இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. என்ஐஏ அதிகாரிகள் தான் இந்த வழக்கைக் கடந்த 3 ஆண்டுகளாக விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரை ஏற்கனவே எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே இந்த வழக்கில் என்ஐஏ அதிகாரிகள் இப்போது கூடுதலாக நான்கு பேரைக் கைது செய்துள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்ததாகச் சென்னை, கோவை, திண்டுக்கல் நகரங்களைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாகத் தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கோவை கார் வெடிகுண்டு வழக்கின் தொடர்ச்சியாக, தமிழ்நாடு தீவிரவாதம் மற்றும் ஆட்சேர்ப்பு வழக்கில், தேசிய புலனாய்வு முகமை மேலும் நான்கு பேரை கைது செய்துள்ளது. இதன் மூலம் இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது. அஹமது அலி, ஜவஹர் சாதிக், ராஜா அப்துல்லா @ மேக் ராஜா, மற்றும் ஷேக் தாவூத் ஆகிய நான்கு பேர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை மெட்ராஸ் அரபிக் கல்லூரியின் நிறுவனர் ஜமீல் பாஷா என்பவர் தீவிரவாதத்தை நோக்கி இழுத்துள்ளார். ஜமீல் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள், அப்பாவி இளைஞர்களைக் குறிவைத்து, அவர்களுக்கு அரபு மொழி கற்பிக்கும் போர்வையில் ஜிஹாதி சித்தாந்தத்தைப் புகுத்தி வந்துள்ளனர். என்ஐஏ ஏற்கனவே ஜமீல் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகளான இர்ஷாத், சையத் அப்துர் ரஹ்மான் மற்றும் முகமது உசேன் ஆகியோரை கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இவர்கள் கிளாஸ் ரூம் மற்றும் சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தி தேச விரோத செயல்களில் ஈடுபட்டு, தீவிரவாதத்திற்கு ஆட்களைத் திரட்டி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அகற்றிவிட்டு இஸ்லாமிய அரசை நிறுவ வன்முறை மற்றும் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளே கடந்த அக்டோபர் 2022ல் கோவையில் நடந்த கார் வெடிகுண்டு வெடிப்புக்கு வழிவகுத்தது. நாடு முழுவதும் தீவிரவாத செயல்களைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக என்ஐஏ இந்த வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.