2017 ஆம் ஆண்டு திமுகவுடன் கரம் கோர்ப்பது என்று எடுத்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை. வேறு எந்த கட்சியுடன் சேர்வதற்கான அவசியமும் இல்லை. இதைப் பற்றி ரகசியமாக பேசுகின்ற பழக்கமும் எங்களுக்கு இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதிமுகவின் 31 ஆவது பொதுக் குழு நாளை ஈரோட்டில் நடைபெற உள்ளது. அந்த பொதுக்குழுவில் சிறந்த முடிவுகள் தீர்மானங்களாக அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் அதிகமான சீட்டுகள் கேட்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படுமா என்பதை நாளை தீர்மானத்தில் அறிவிக்கப்பட்ட பின் தெரிந்து கொள்வீர்கள்.
ஆங்கில மொழி குறித்து அமித்ஷாவின் கருத்துக்கு, அவரது உளறல்களுக்கு எல்லையே இல்லை. ஆங்கிலம் உலக மொழி, ஆங்கிலம் தெரிந்தால் உலகில் பல நாடுகளுக்கும் சென்று வரலாம். அதனால்தான் பேரறிஞர் அண்ணா தாய் தமிழும் ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டில் இருக்கும் என்று கூறினார். அதுமட்டுமின்றி இந்தியாவில் உள்ள மாநில மொழிகள் அனைத்தும் ஆட்சி மொழிகள் ஆக்க வேண்டும் என்று மாநிலங்களவையிலேயே பேசினார். திராவிட இயக்கம் இந்த தீர்மானத்தை முன்வைக்கிறது. அதனை மதிமுகவும் வலியுறுத்தி வருகிறது.
அதே சமயம் பாஜகவிற்கு இதில் விருப்பமும் இல்லை. இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்க வேண்டும் என்பதிலேயே தீவிரமாக இருக்கின்றனர். அதில் அவர்கள் தோற்றுப் போவார்கள். பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் இந்தியா என்று அழைக்கக் கூடாது. பாரத் என்று தான் அழைக்க வேண்டும். தலைநகர் டெல்லிக்கு பதில் வாரணாசியை மாற்ற வேண்டும். கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஓட்டுரிமை கொடுக்கக் கூடாது. இந்தியும் சமஸ்கிருதம் மட்டும்தான் இந்தியா முழுவதும் பரப்பப்பட வேண்டும் என்று பிரகடனம் வெளியிட்டதாகவும், இந்தப் பின்னணியில் தான் இந்த சக்திகள் இயங்கிக் கொண்டிருப்பதாக சாடினார். பல மாநிலங்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறினார்.
இந்தி எதிர்ப்பில் ஈடுபடாத மாநிலங்களான கர்நாடகா, மராட்டியம், பஞ்சாப், மேற்குவங்கம் ஆகியவை தற்போது இந்தி வேண்டாம் என்று தீர்மானம் போடுகின்றனர். இவர்கள் திணிக்க நினைக்கும்போது அதற்கான எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. ஒன்றியம் என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்று பாஜகவினர் சிலர் கூறி வருவது குறித்தான கேள்விக்கு, அவர்கள் கூறுவதற்கெல்லாம் நாம் பதிலளித்துக் கொண்டிருக்க முடியுமா. ஒன்றியம் என்றால் யூனியன் அதனால்தான் ஒன்றியம் என்று கூறுகின்றோம் என்றார்.
2017 ஆம் ஆண்டு திமுகவுடன் கரம் கோர்ப்பது என்று எடுத்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை. வேறு எந்த கட்சியுடன் சேர்வதற்கான அவசியமும் இல்லை. இதைப் பற்றி ரகசியமாக பேசுகின்ற பழக்கமும் எங்களுக்கு இல்லை. கிமு 700 இல் இருந்து கிபி 500 வரை எடுக்கப்பட்ட பொருள்கள் எல்லாம் மொகஞ்சதாரோ ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களுக்கு நிகராக இருக்கின்றன.
இரும்பு உலோகம் அன்றைய நாட்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோன்று வரிசையான வீடுகள் சாக்கடை போவதற்கான கால்வாய்கள் போன்றதற்கான ஆதாரங்களை ராமகிருஷ்ணா முதலிலேயே வெளியிட்டார். அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய மத்திய அரசு வேண்டுமென்று இன்னும் துல்லியமாக ஆராய வேண்டும் என்று கூறி குழப்பி வருகிறது.
கீழடி நாகரிகம் என்பது தமிழர் நாகரிகம், திராவிட நாகரிகம். அவர்கள் ஆரிய நாகரிகத்தை ஆரிய கலாச்சாரத்தை இங்கு திணிக்க வேண்டும் என்ற நோக்கம் இருப்பதால் கீழடி உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு நாகரீகமாக வாழ்ந்தார்கள் என்ற சான்றுகள் கிடைப்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. மேலும், அது அவர்களுக்கு எதிராகப் போய்விடும் என்பதனால் பாஜக கூட்டம் இன்னும் வலுவான ஆதரவுகள் வேண்டும் என்று தெரிவித்து வருகிறது.
வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, மத்திய உளவுத் துறை ஆகியவற்றை இந்துத்துவாவை திணிப்பதற்கு பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர். அதன் காரணமாகத்தான் அவர்கள் மீது எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து டிஆர்பி ராஜா கேலிச்சித்திரம் வரைந்ததாக எழுந்து வரும் புகார்கள் மற்றும் வெளியில் நடமாட முடியாது என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியது குறித்தான கேள்விக்கும் பதிலளித்த வைகோ, வெளியில் நடமாட முடியாது என்று கூறுகின்ற அளவிற்கு வலிமையோ உரமோ இல்லாத கூட்டம் அவர்கள்.
நயினார் நாகேந்திரன் நல்ல நண்பர், இந்த பொறுப்பிற்கு வந்த பிறகு பொருத்தமற்ற முறையில் கற்பனையாக சிலவற்றை பேசி வரும் இந்த போக்கை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி உதயகுமாருக்கு முன்பே நயினார் நாகேந்திரன் இதனை கூறியிருந்தார். பாஜக உள்ளேயே பல்வேறு குழப்பங்களும், பிரச்சினைகளும் இருக்கின்றன என்றார்.
பாமக கட்சி விவகாரம் குறித்தான கேள்விக்கு, பாமக ஒரு வலுவான கட்சி. தற்போது அங்கு நிலவி வருவது உட்கட்சி பிரச்சனை. அதைப்பற்றி எந்த கருத்தையும் கூறுவதற்கு விரும்பவில்லை. பாஜக யார் யாரையெல்லாம் அழைக்க முடியும் என்று நினைப்பதாகவும், நேரில் சென்று பேசி வருகிறது. ராமதாஸும், அன்புமணியும் அவரவர் கருத்துக்களை கூறிவிட்டார்கள். தற்பொழுது தந்தைக்கும், மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருப்பதால் இரண்டு அணி போன்று தெரிகிறது. காலப்போக்கில் அதனை எல்லாம் மாற்றிக் கொண்டு கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றாவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்றார்.
