போதைப்பொருள் விவகாரம்: நடிகர் ஸ்ரீகாந்திடம் தீவிர விசாரணை!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிரசாத் என்பவரிடம் இருந்து போதை பொருளை நடிகர் ஸ்ரீகாந்த் வாங்கி பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்தை சென்னை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

போதை பொருள் தடுப்பு விவகாரத்தில் நுண்ணறிவு பிரிவு போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இரண்டு தினங்களுக்கு முன்பு, சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த பிரதீப் குமார் மற்றும் மேற்கு அமெரிக்க கானா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவரை சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 11 கிராம் கொக்கைன் போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அதில், கிளம் ஒன்றில் அறிமுகமான நபர் ஒருவரிடம் இருந்து போதைப்பொருளை வாங்கி அதை சென்னையில் பலருக்கு விற்பனை செய்ததாக பிரதீப் குமார் கூறினார். அதைத் தொடர்ந்து அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத்திற்கு போதை பொருள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இவர்கள் இருவருக்கும், பெங்களூரில் வசித்து வரும் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் தான் போதைப்பொருள் விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, முன்னாள் அதிமுக பிரமுகரிடம் இருந்து நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருளை வாங்கி இருப்பது தெரியவந்ததை அடுத்து, சென்னை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார், நடிகர் ஸ்ரீகாந்தை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர் போதை பொருளை பயன்படுத்தியதை கண்டறியும் வகையில் அவரின் ரத்த பரிசோதனை மேற்கொள்ளுவதற்கான சம்மன் கொடுக்கப்பட்டதை அடுத்து, நடிகர் ஸ்ரீகாந்த் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், அவர் போதை பொருளை பயன்படுத்தியது தெரியவந்தால், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.