கொள்கைகளை எடப்பாடி பழனிசாமி விட்டு தர மாட்டார்: எஸ்.பி.வேலுமணி!

இந்து முன்னணி மற்றும் சங் பரிவார் அமைப்புகள் சேர்ந்து நடத்தியிருந்த ‘முருக பக்தர்கள்’ மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றிருந்தார்கள். மாநாட்டில் அண்ணா விமர்சிக்கப்பட்டதை இவர்கள் எதிர்த்து கேட்கவில்லை என்று திமுக குற்றம்சாட்டியிருந்த நிலையில், “எடப்பாடி பழனிசாமி கொள்கைகளை விட்டுக்கொடுக்க மாட்டார்” என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பாஜக தலைவர்கள், ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண், ஆர்எஸ்எஸ் முக்கியஸ்தர்கள், மடாதிபதிகள், ஜீயர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இம்மாநாட்டில் அண்ணா குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இதற்கு மாநாட்டில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த விமர்சனத்திற்கு பதலளித்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளதாவது:-

சிண்டு முடிவதே ஆர்.எஸ். பாரதியின் வேலை. அவரின் அறிக்கைகள் எல்லாம் உண்மையாக இருக்காது என்பதில் மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சுயமரியாதையோடு கொள்கையை விட்டுக்கொடுக்காத இயக்கமாக என்றைக்கும் அதிமுக இருக்கும். எல்லா பிரச்னைகளையும் திசைதிருப்பி ஊடகத்தில் பேச வைத்து மடைமாற்றும் அரசியலைதான் திமுக செய்கிறது. அதிமுக-பாஜக கூட்டணி அமைந்ததுமே மக்கள் முடிவு செய்துவிட்டனர்; கண்டிப்பாக அதிமுக ஆட்சி, இபிஎஸ் தலைமையில் உறுதி என்று! இன்னும் அதிகமான கட்சிகள் இபிஎஸ் தலைமையில் சேரும்.

வக்பு வாரிய திருத்த மசோதா வந்தபோதுகூட, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்தே வாக்களித்தனர். எனவே, கொள்கை வேறு; கூட்டணி வேறு! திமுகவினர் சுயநலத்திற்காக எப்படி வேண்டுமானாலும் பேசுவர். முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா விடியோ குறித்து முன்கூட்டியே எதுவும் சொல்லப்படவில்லை. அண்ணா பற்றி பேசியதால் 2024ல் இபிஎஸ் என்ன முடிவெடுத்தார் என அனைவரும் அறிவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.