எடப்பாடி பழனிசாமி எடுத்த நடவடிக்கை அனைவருக்கும் தெரியும்: ஆர்பி உதயகுமார்!

அண்ணா மற்றும் ஜெயலலிதா ஆகியோரை தவறாக பேசியதால், எடப்பாடி பழனிசாமி எடுத்த நடவடிக்கை அனைவருக்கும் தெரியும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக நடத்தப்பட்ட முருகன் மாநாட்டில் பெரியார் மற்றும் அண்ணா ஆகியோர் குறித்து சர்ச்சையான வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அந்த மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பட்டா மற்றும் கடம்பூர் ராஜூ ஆகியோர் பங்கேற்று இருந்தனர். பெரியார், அண்ணா ஆகியோர் குறித்து சர்ச்சையான காணொளி ஒளிபரப்பப்பட்ட போதும், அமைதியாகவே அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு மேடையில் இருந்து வலதுபுறமாக இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. அந்த இடத்தில் இருந்து மேடை நன்றாக தெரியும்படி இருந்தது. அதுமட்டுமல்லாமல் முருகன் மாநாட்டில் பங்கேற்ற விஐபி-க்களுக்கு பிரத்யேக பாதை உட்பட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து பெரியார், அண்ணா ஆகியோர் குறித்து மோசமான வீடியோ ஒளிபரப்பாகிய போதும், அதிமுக நிர்வாகிகள் அமர்ந்திருந்தது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. திமுக மட்டுமல்லாமல் அதிமுக கட்சியினரே கொந்தளித்தனர். இதனைத் தொடர்ந்து முருகன் மாநாட்டில் கலந்து கொண்டது தொடர்பாக அதிமுக ஐடி விங் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் முருகன் மாநாடு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கூறியுள்ளதாவது:-

முருகன் மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்களுக்கும், அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் என்ன நடைமுறைகளை கையாள்வார்கள் என்பதும் தெரியாது. இப்படியான ஒரு வீடியோவை ஒளிபரப்புவார்கள் என்பதும் தெரியாது. அந்த வீடியோ ஒளிபரப்பான போது நாங்கள் மேடைக்கு பின்புறமாக அமர்ந்திருந்தோம். அந்த வீடியோவை பார்க்க வாய்ப்பே இல்லை. அந்த வீடியோ ஒளிபரப்பிற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.

முருகன் பக்தர்கள் அடிப்படையில் மேடை நாகரீகம் கருதி அமைதி காத்தோம். ஆனால் அண்ணாவுக்கு ஒரு இழுக்கு என்றால், அதனை எதிர்த்து அதிமுகவே முதலாவதாக குரல் கொடுக்கும். முருகன் மாநாட்டில் அரசியல் இருக்காது என்ற நம்பிக்கையில் தான் பங்கேற்றோம். அண்ணாவையும், ஜெயலலிதாவையும் அவதூறாக பேசியதற்காக எடப்பாடி பழனிசாமி எடுத்த நடவடிக்கை அனைவருக்கும் தெரியும். அதனால் திமுகவை போல் எதற்கும் சமாதானப்படுத்தி ஆட்சியை தக்க வைக்கும் கட்சியல்ல அதிமுக. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.