இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது; ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகு இந்து மதம் வந்தது என்று திருமாவளவன் கூறினார்.
2025ம் ஆண்டிற்கான விசிக விருது வழங்கும் விழாவில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-
தமிழ்நாடு அரசியலை நாம் கூர்மைப்படுத்துகிறோம்: சனாதன சக்திகள் தமிழ்நாடு மண்ணை நஞ்சாக்க விடமாட்டோம். சனாதன சக்திகளா?, விடுதலை சிறுத்தைகளா? என்பதுதான் தமிழ்நாட்டு பாலிடிக்ஸ். தமிழ்நாட்டு அரசியலை மதவாத அரசியலை நோக்கி மடைமாற்றம் செய்ய பலர் முயற்சிக்கின்றனர்.
மதச்சார்பின்மைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்., பாஜக செயல்படுவதால் அது கூர்மைப்படுகிறது. மதச்சார்பின்மை கூர்மைப்படக் காரணமான ஆர்.எஸ்.எஸ்., பாஜகவுக்கு நன்றி. தேர்தல் கட்சி என்ற வகையில் பாஜகவை எதிர்க்கவில்லை; அவர்களின் அரசியலை எதிர்க்கிறோம்.
நாட்டில் அமையும் அரசு மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும்; பாஜகவோ அரசமைப்பை எறிய நினைக்கிறது. நாம் கொடியேற்ற, பேனர் கட்ட, பொதுக்கூட்டங்களை நடத்த போராட வேண்டியுள்ளது. எங்கள் இயக்கம் சட்டமன்ற, நாடாளுமன்ற சீட்டு பேரம் பேசுவதற்கு அல்ல; ஒருநாள் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றுகூட நான் அறிவித்துவிடுவேன். இருக்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை; பிளாஸ்டிக் சேர், தரையில் கூட அமருவேன்.
இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது; ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகு இந்து மதம் வந்தது; பிற மதங்களில் சகோதரத்துவம் உள்ளது; இந்து மதம் அடிப்படையிலேயே பாகுபாடு கொண்டது; அணு ஆயுதங்களால் கூட தகர்க்க முடியாதது இந்தியாவில் உள்ள சாதிய கட்டமைப்பு.
கோயிலுக்குச் செல்லும்போது அங்கே என் தலையில் ஒரு தொப்பி வைக்கிறார்கள். அதை எடுக்காமல் தலையிலேயே வைத்திருக்க முடியுமா? அடுத்த ஒரு நிமிடத்தில் அதை எடுத்து விடலாம். அதை வைப்பவர்களுக்கும் கூட நாம் எடுத்து விடுவோம் என்று தெரியும். அது ஒரு அடையாளம். அதே போல பூசாரி என் நெற்றியில் திருநீறு பூசினார். அவருடைய உணர்வை நான் மதிக்கிறேன். அவருக்கு நான் நன்றி சொன்னேன். அதை கொஞ்ச நேரம்தானே வைத்திருக்க முடியும். புண்ணியம் கிடைக்கும் என நான் அதை பூசிக் கொள்ளவில்லை. அவமதிக்க வேண்டும் என்றும் நான் அதை அழிக்கவில்லை.
என் மீது நம்பிக்கை, பாசம் வைத்திருப்பவர்கள் இன்றைக்கும் என்னை பல கோயில்களுக்கு அழைக்கிறார்கள். நான் போகிறேன். கலசத்தில் தண்ணீர் ஊற்றச் சொல்கிறார்கள், நான் ஊற்றுகிறேன். என் தாய் என்னை வரவேற்கும்போது எனக்கு ஆரத்தி எடுத்து என் நெற்றியில் திருநீறு பூசுகிறார். அதை ஏற்றுக் கொள்கிறேன். என் தாய்க்கு என்ன மதிப்பளிக்கிறேனோ, என் மக்களுக்கும் அதே மதிப்பை அளிக்கிறேன். அது மக்கள் மீது நான் வைத்திருக்கும் மதிப்பு.
திருநீரை அழித்தது பற்றி பேசுவோர் என்னை மேல்பாதி கோயிலுக்குள் அழைத்து செல்ல முடியுமா?. புண்ணியம் கிடைக்குமென திருநீறு பூசவில்லை; அவமதிக்கும் நோக்கில் அதை அழிக்கவும் இல்லை. என்னை சங்கராச்சாரியராக்க வேண்டாம்; சகோதரனான ஏற்றுக்கொள்ளத்தான் சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
