சனாதனமே நம்முடைய அடையாளம்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

இந்தியா அரசியல் காரணங்களால்தான் மதசார்பற்ற நாடானது என்றும், சனாதனமே நம்முடைய அடையாளம் எனவும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருக்கிறார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சமீப காலமாக தெரிவித்து வரும் கருத்துக்கள் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றன. திராவிடம் குறித்து அவர் பேசியது, சனாதனத்துக்கு ஆதரவாக உரையாற்றியது, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு எதிராக கருத்து தெரிவித்தது என தொடர்ந்து அவரது உரைகள் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன.

இந்த நிலையில் சென்னை பட்டயக் கணக்காளர் அமைப்பினுடைய 90 வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

பன்முகத்தன்மை கொண்ட நிலப்பரப்பாக இந்தியாவை ஆங்கிலேயர்கள் பதிவு செய்ததை ஏற்க முடியாது. அறத்தை மையமாக கொண்டது சனாதனம். ஆனால், சனாதனத்துக்கு எதிரான மதசார்பற்ற என்ற வார்த்தையை ஆங்கிலேயர்கள் அதற்கு தவறான விளக்கம் கொடுத்து அரசியலமைப்பில் சேர்த்துவிட்டனர். அரசியல் காரணங்களால் மட்டுமே அரசியலமைப்பின் சட்டப்பிரிவு எண் 42 திருத்தம் செய்யப்பட்டு அதில், மதசார்பற்ற என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது.

நமது அடையாளமே சனாதனம் தான். சனாதனத்தின் அடிப்படையில் யாரும் முன்னவர்களும் இல்லை, பின்னவர்கள் யாரும் இல்லை. சனாதனம் என்றால் அனைத்து மதங்களும் சமம் என்றே அரத்தம். இந்தியாவில் பிரிவினைகளை ஏற்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்கள்தான். கடந்த 1951 ஆம் ஆண்டுக்கு பிறகே இந்தியாவில் அதிக சாதிகள் உருவாகின. இவ்வாறு அவர் பேசினார்.