கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மதுரை ஆதீனத்தின் கார் சமீபத்தில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்து தொடர்பாக மதுரை ஆதீனம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் பெரும் பேசும்பொருளானது. மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் தன்னை கொல்ல முயன்றதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார். இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு மதுரை ஆதீனத்தின் குற்றச்சாட்டை பொய் என்று கூறிய நிலையில் தற்போது அவர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள ஆதீனங்களில் முக்கியமான ஒன்று மதுரை ஆதீனம். மதுரை ஆதீனமாக இருப்பவர் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார். இந்நிலையில் தான் மதுரை ஆதீனம் சமீபத்தில் பெரும் பரபரப்பை கிளப்பினார். அதாவது கடந்த மே 3ம் தேதி சென்னையில் அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நடந்தது. இதில் பங்கேற்க மதுரை ஆதீனம் காரில் மதுரையில் இருந்து சென்னை புறப்பட்டு சென்றார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அவரது கார் விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக மதுரை ஆதீனம் மற்றும் கார் டிரைவர் உள்பட அனைவரும் காயமின்றி தப்பினர். அதன்பிறகு மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், தன்னை கார் விபத்து மூலம் கொல்ல சதி நடந்ததாக தெரிவித்தார். அதேபோல் ஆதீனத்தின் கார் ஓட்டுநரும் கூட, நம்பர் பிளேட் இல்லாத வாகனம் மூலம் திட்டமிட்டு குறிப்பிட்ட மதத்தினர் மோதி விபத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை கிளப்பியது.
இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை விசாரணையை தொடங்கியது. முதற்கட்டமாக சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதன்பிறகு மதுரை ஆதீனம் பயணித்த காரும், இன்னொரு காரும் லேசான விபத்தில் சிக்கியதும், கொலை முயற்சி எதுவும் நடக்காததையும் போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே தான் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜலிங்கம் சென்னை மாநகர ஆணையருக்கு புகார் ஒன்றை அனுப்பினார். அதில், “மதுரை ஆதீனம் பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் இரு மதத்தவர்கள் இடையே வெறுப்புணர்வு, பகை உணர்வை தூண்டுகிறார். இது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும். மதநல்லிணக்கத்தை சீர்க்குலைக்கும். இதனால் மதுரை ஆதீனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார்.
இந்த புகாரைத் தொடர்ந்து சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் நேற்று மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கலவரத்தை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், இருபிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்துதல் உள்பட 4 பிரிவுகளில் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதோடு இந்த வழக்கு தொடர்பாக மதுரை ஆதீனத்துக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத் போலீசார் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
