அரசியல்வாதிகள் காது வழி செய்திகளை வைத்து விமர்சிக்க கூடாது: மனோ தங்கராஜ்!

லட்சக்கணக்கான விவசாயிகள் நம்பி இருக்கும் தொழில்கள் குறித்து அரசியல்வாதிகள் காது வழி செய்திகளை வைத்து விமர்சிக்க கூடாது என்று பால் வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

கோவை மாவட்டம், ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் “மிஷன் ஒயிட் வேவ்” என்ற பயிற்சி பட்டறை திட்டத்தை பால் வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் செயல் திட்டத்தை மேம்படுத்தி உள்ளோம். அனைத்து சங்கங்களையும் லாபத்தில் இயங்கும் சங்கமாக மாற்ற செயல்திட்டம் வைத்துள்ளோம். 483 செயல் இழந்த சங்கங்களையும் செயல்பட வைத்து உள்ளோம். 2,484 சங்கங்கள் புதிதாக செயல்பாட்டுக்கு வந்துள்ளன. 1,325 சங்கங்கள் இன்னும் செயல்படாத சங்கங்களாக லாபம் ஈட்ட முடியாமல் உள்ளனர். இதனை மாற்றும் வகையில் தனியார் கல்லூரிகளையுடன் இணைந்து எம்பிஏ மாணவர்களை கொலாப்ரேஷன் செய்து சில மாணவர்களை தேர்வு செய்து பிசினஸ் மேப் உருவாக்கி சங்கங்களை லாபமாக கட்டமைக்க இந்த திட்டத்தை தொடங்க உள்ளோம்.

ஆவின் பொருள்களின் விற்பனையை கிராமப் பகுதிகளில் அதிகரிக்க 3 மாதங்களில் நடவடிக்கை இருக்கும். மிஷன் ஒயிட் வேவ் மாடலில் கிடைக்கும் படிப்பினைகள் மூலம் இதனை விரிவுபடுத்தும் திட்டமும் உள்ளன. AI எதிர் பாராத வளர்ச்சியடைந்துள்ளது. அது இரு முனை கத்தி போல அதில் அதிக நல்லதும் உள்ளது கெட்டவையும் உள்ளன. AI ஒரு புதிய இணைய தளத்தையே உருவாக்கும் அளவிற்கும் வளர்ந்துள்ளது. AI is the product of human brain என்றார்.

தமிழ்நாட்டில் பாலின் தரம் எந்த அளவிற்கு தற்போது உள்ளது என்ற கேள்விக்கு, தமிழ்நாடு அளவில் பாலின் தர அளவு நன்கு உயர்ந்துள்ளது. ஆடு மாடுகளுக்காக சீமான் நடத்தும் மாநாடு தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, நகர மயமாதலை எதிர் பார்க்கிறோம். அப்போது மேய்ச்சல் நிலங்கள் குறையும் என்பது நிச்சயம் இருக்கும். அதற்கான தீர்வுகளையும் காண்போம் என பதிலளித்தார். மேலும், விமர்சனம் செய்பவர்கள் முன்னேற்றங்களைப் பற்றியும் பேச வேண்டும். பாலில் கொழுப்பை சேர்த்தோம், டிடெர்ஜென்ட் சேர்த்தோம் என்று எல்லாம் விமர்சனம் செய்தார்கள். இப்போது வாய் அடைத்து போய் உள்ளார்கள். வளர்ச்சிக்கான சிறப்பான திட்டங்கள் இருந்தால் கூறுங்கள். நிச்சயம் ஏற்கிறோம். அரசியல் தலைவர்கள் காது வழி செய்திகளை வைத்து பேசக் கூடாது. விவசாயிகள் நம்பி இருக்கும் துறை குறித்து எல்லாம் பேசும் போது நன்கு ஆராய்ந்து பேச வேண்டும் என்றார்.