நீட் என்னும் உயிர்க்கொல்லி நுழைவுத் தேர்வை ரத்து செய்க: தொல்.திருமாவளவன்!

நீட் என்னும் உயிர்க்கொல்லி நுழைவுத் தேர்வைரத்து செய்ய வேண்டும் என்று, தொல்.திருமாவளவன் கடுமையாக சாடி உள்ளார்.

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பெரியார் பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுக்கான வினாத்தாளில் எது தாழ்ந்த சாதி என்ற கேள்வியை இடம் பெற செய்திருப்பது எதிர்ச்சியாக நிகழ்ந்த ஒன்றாக தெரியவில்லை. இது சனாதான சக்திகளின் பின்னணிகள் நிகழ்ந்ததாக விசிக நம்புகிறது. மிகவும் பிற்போக்குத்தனமான இந்த அணுகு முறையை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. பெரியார் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் பெரியாரின் கொள்கைக்கு எதிராக கேள்வியை வினாத்தாளில் இடம் பெற செய்திருக்கிறார்கள் என்றால் இது பெரியாரை அவமதிக்கும் உள்நோக்கத்தோடு செயல்பட்ட நடவடிக்கை என விசிக நம்புகிறது. ஆகவே இது குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். இது போன்ற தீய சக்திகளை தொடக்கத்திலே களை எடுக்க வெண்டும் என்ற உயர் கல்வித் துறைக்கு விசிக வேண்டுகோள் வைக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை முழு நேர பிரச்சாரமாக பரப்பிக் கொண்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதை மிகுந்த வேதனைக்குரியது. கண்டிக்கத்தக்கது. உயர்கல்வித் துறைக்கு தெரியாமலேயே மதுரை பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் நடத்துகிறார்கள். இது ஆளுநரின் தான்தோன்றித்தனமான போக்கு. ஆளுநர் குறித்து குடியரசுத் தலைவரிடமும் பிரதமரிடமும் முறையான புகார் அளிக்க வேண்டும்.

நாடாளுமன்ற அவையில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என்று பல வார்த்தைகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இது வேதனையாக இருக்கிறது. இந்த அரசு பாசிச அரசு என்பதற்கு வேறு சான்று தேவையில்லை. ஊழல், சர்வதிகாரம், துரோகம், ஏமாற்றுகிறார், பாலியல் தொல்லை என்ற வார்தைகளை பயன்படுத்தக் கூடாது என்கிறார்கள். எப்படி நாடாளுமன்றத்தில் இதை பயன்படுத்தாமல் இருக்க முடியும். பாலியல் தொல்லை என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்றால், பாலியல் தொல்லை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நிலைபாட்டை கொண்டு உள்ளார்களா? என்ற கேள்வி எழுகிறது. ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான், பாரத் மாதா கி ஜே என்ற வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் பயன்படுத்த வேண்டும் என்று புத்தகத்தை வெளியிட வாய்ப்புள்ளது.

புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் அசோக சின்னம் சர்ச்சைக்குரிய சின்னமாக மாறி உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் வடிவமைத்த அசோக சின்னம் 4 புறமும் சிங்கமுகம் குறித்த முகமாக அமைதி தவழும் முகமாக இருக்கும். சிங்கமுகமாக இருந்தாலும் அதை அமைதி தவழும் வகையில் வடிவமைத்ததற்கு காரணம் பௌத்தத்தை அடையாளப்படுத்த அனைவரும் பௌத்தத்தை பின்பற்றுவார்கள் என்ற நோக்கத்தில் அவ்வாறு அமைக்கப்பட்டது. சனாதனத்தை திணிக்கவே இந்த அசோக சின்னத்திலும் கோபம் கொண்ட வகையில் சிங்கத்தின் முகங்களை பொறித்திருக்கிறார்கள். அதை உடனடியாக மாற்ற வேண்டும் என விசிக வலியுறுத்துகிறது.

கள்ளக்குறிச்சியில் ஸ்ரீமதி என்ற மாணவி ஒருவர் உயிரிழந்து இருக்கிறார். அந்த ஊர் பகுதி மக்கள் இது தற்கொலை இல்லை, கொலை என்று கூறுகிறார்கள். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விசாரிக்க வேண்டும். அது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். TET தேர்வு எழுதிய ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் வேலை வாய்ப்பு இன்றி காத்துக் கிடக்கிறார்கள், 13,000 தற்காலிக முறையில் நியமனம் செய்யப்படுவார்காள் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதை அரசு உடனடியாக கைவிட வேண்டும். TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

மோடி அரசு அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை உயர்த்தி இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. அதை அவர்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதனால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். நாளை எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மல்லிகார்ஜுன கார்கே அவர்களின் தலைமையில் நடைபெறும். அந்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும்.

நீட் தேர்வு எழுதுவதற்கு முன்பாக அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவரின் உயிர் இழப்புக்கு மோடி அரசு தான் காரணம். அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். ஆன்லைன் விளையாட்டை தடை விதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்திலும் ஏக்நாத் ஷிண்டே உருவெடுப்பார் என்று, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தொல்.திருமாவளவன், அண்ணாமலை மனப்பால் குடிக்கிறார். இது வட இந்திய மாநிலங்களில் நடக்கும்; தமிழ்நாட்டில் நடக்காது எனத் தெரிவித்தார்.

மேலும் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம், வயலப்பாடி அருகேயுள்ள கீரனூர் கிராமத்தைச் சார்ந்த பள்ளி மாணவி நிஷாந்தினி நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவலறிந்து மிகுந்த வேதனையும் துக்கமும் மேலிடுகிறது. அவரது குடும்பத்தை எண்ணி வெகுவாகத் துயர்ப்படுகிறேன்.

மருத்துவம் படிப்பது தான் மானத்திற்குரியது என்று இந்த பெண்பிள்ளைக்கு யார் தான் கற்பித்தது? நீட் தேர்வில் தேர்ச்சி அடையாவிட்டாலும்; அல்லது தேர்ச்சிப் பெற்றாலும் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காவிட்டால் அப்படி என்ன இழுக்கு ஏற்பட்டு விடும்? வ.கீரனூர் கிராமத்துக்கு அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சார்ந்த அனிதாவைத் தொடர்ந்து இப்படி அடுக்கடுக்கான தற்கொலைகள் நடப்பது ஆழ்ந்த கவலையை அளிக்கிறது.

ஒவ்வொரு சாவின் போதும் “தற்கொலை வேண்டாமென்று” ஓங்கி உரத்துக் கத்துகிறோமே, எமது குரல் மாணவ- மாணவியர் செவிகளில் விழவே இல்லையா? அண்மையில் (சூலை 09) ஓசூர் முரளி கிருஷ்ணா நீட் தேர்வு அச்சத்தால் தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட அவலம் நிகழ்ந்தது. இது ஒரு தொடர்கதையாக இன்னும் நீடிப்பது சொல்லொணா துயரத்தை அளிக்கிறது. இத்தனை இளங்குருத்துகள் நீட் என்னும் கொடிய நஞ்சினால் அவிந்துபோயுள்ள நிலையிலும் இந்திய ஒன்றிய ஆட்சியாளர்களின் நெஞ்சில் ஒருதுளியும் ஈரமில்லை என்பது பேரதிர்ச்சியை அளிக்கிறது.

அனிதா முதல் நிஷாந்தி வரை இதுவரையில் 17 பேரை தமிழ்நாடு நீட்டுக்குப் பறிகொடுத்துள்ளது. ஆனால், இந்திய ஆட்சியாளர்கள் கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை. ஈவிரக்கமில்லா இந்தக் கும்பலின் கைகளில் ஆட்சியதிகாரம் சிக்கிக் கொண்டது. என்ன செய்ய? ஒருமுறைக்கு இருமுறை நீட் விலக்கு மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி, தமிழ்நாடு அரசு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தும் ஃபாசிச பாஜக அரசு மெத்தனம் காட்டி வருகிறது. அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இன்னும் காலம் தாழ்த்தி வருவதன் விளைவாகவே அடுத்தடுத்து இரண்டு மாணவர்கள் பலியாக நேர்ந்துள்ளது. எனவே, முரளிகிருஷ்ணா( ஜூலை 07) நிஷாந்தி(ஜூலை 16) ஆகிய இருவரின் சாவுக்கும் மோடி அரசே பொறுப்பேற்க வேண்டும்.

இந்நிலையில், இவ்விரு மாணவச் செல்வங்களின் உயிரிழப்புக்குக் காரணமான ஆர்எஸ் எஸ் மற்றும் பாஜக அரசைக் கண்டித்தும்; தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியும்; நிஷாந்தி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டியும்; அக்குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்கிட கோரியும் விசிக சார்பில் பெரம்பலூரில் இன்று (சூலை 17) காலை 10.00 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகளின் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

அரியலூர் பெரம்பலூர் மாவட்ட சிறுத்தைகள் தவறாமல் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திட முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். நீட் என்னும் உயிர்க்கொல்லி நுழைவுத் தேர்வை எதிர்த்து ஃபாசிச பாஜக அரசைக் கண்டிக்கும் இந்த அறப்போராட்டத்தில் அனைத்துச் சனநாயக சக்திகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென அறைகூவல் விடுக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.