பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார். சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவை ஜெகன்மூர்த்தி மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தை நாடி இருக்கிறார்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் மற்றும் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதில் விஜயஸ்ரீ-க்கு ரூ.500 கோடி அளவிற்கு சொத்துகள் இருப்பதாக தெரிய வந்தது. இதன் காரணமாக பெண்ணை வீட்டிற்கு அழைத்து செல்ல விரும்பிய குடும்பத்தினர், இளைஞர் தனுஷின் தம்பியை கடத்தினர். இதுதொடர்பாக போலீசாரிடம் புகாரளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதன்பின் நடந்த விசாரணையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராம் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிலும் சிறுவனின் கடத்தலுக்கு ஏடிஜிபி ஜெயராம் கார் கொடுத்தது தெரிய வந்த நிலையில், பூவை ஜெகன்மூர்த்தியை விசாரிக்க போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் அவரது ஆதரவாளர்கள் போலீசாரை நீண்ட நேரம் அனுமதிக்கவில்லை.

இதனால் தாம் கைது செய்யப்படலாம் என்பதால், முன்ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கின் விசாரணையின் போதே பூவை ஜெகன்மூர்த்தியை விசாரணைக்கு போலீசாரின் ஆஜராகுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதன்பின் அவரிடம் ஒருநாள் விசாரிக்கப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், சிறுவனின் கடத்தலுக்கு மூளையாக பூவை ஜெகன்மூர்த்தி செயல்பட்டுள்ளார். ஏற்கனவே சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான 5 பேருடன் பூவை ஜெகன்மூர்த்தி இருக்கும் காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதனால் பூவை ஜெகன்மூர்த்தி கைது செய்ய அனுமதிக்க வேண்டும். அவருக்கும் ஏடிஜிபி ஜெயராமுக்கும் இடையிலான தொடர்பு பற்றி விசாரிக்க வேண்டும். அதனால் முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதன்பின் பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். இதன் காரணமாக பூவை ஜெகன்மூர்த்தி கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியது. இதனையறிந்த பூவை ஜெகன்மூர்த்தி மீண்டும் தலைமறைவாகினார். இந்த நிலையில் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.