சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் மண்டை ஓடுகளை ஆய்வு செய்து முகத்தை இங்கிலாந்து பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ள நிலையில் இனியாவது மத்திய அரசு கீழடி ஆய்வறிக்கையை வெளியிடுமா என நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கீழடியில் கிடைத்த மனித மண்டை ஓடுகளை ஆய்வு செய்து அறிவியல் வழியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் முகத்தை வடிவமைத்துள்ளது இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம்.
கீழடியில் தமிழ் மக்கள் நாகரிகத்தில் சிறந்தவர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கான அறிவியல் சான்றுகள் ஒன்றின் பின் ஒன்றாக உலக அரங்கில் நிரூபிக்கப்படுவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. இதற்கு பின்பாவது ஒன்றிய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா என்பதே 8 கோடி தமிழர்களின் மனங்களில் எழும் ஒரே கேள்வி! என தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக அரசு தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு 10ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்தன. அதன் மூலம் கீழடியில் நகர நாகரிகம் நிலவியதை தொல்லியல் சான்றுகள் மூலம் கிடைத்தது. அதேவேளையில் கிமு 6 ஆம் நூற்றாண்டில் எழுத்தறிவு பெற்ற சமூகமாக தமிழ்ச் சமூகம் விளங்கியது என்பதை உலகறிய செய்தது. கிறிஸ்து பிறப்புக்கு முன்பு 2500 ஆண்டுகளுக்கு முன்பு கீழடியில் வாழ்ந்த இரு மனிதர்களின் மண்டை ஓடு கிடைத்தது. மனித முகம் அதை வைத்து புதிய தொழில்நுட்பத்தின் மூலம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் பிரிட்டனின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகமும் இணைந்து கீழடியில் வாழ்ந்த மனிதர்களின் முகத்தை உருவாக்கும் பணியை மேற்கொண்டன. கொந்தகை அருகே கண்டறியப்பட்ட எலும்பு பகுதிகளில் இருந்து டிஎன்ஏ ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவுள்ளது. இது பழங்கால தமிழர்களின் வழித் தோன்றல்களை கண்டறிய உதவும் என தெரிகிறது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த களத்தின் தொல்லியல் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் அமர்நாத் ராமகிருஷ்ணன். இவரது குழு ஆய்வு செய்ததில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் மூலம் நகர நாகரிகம் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து அமர்நாத் அஸ்ஸாம் மாநிலம் குவாஹாத்திக்கு மாற்றப்பட்டார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவியது. தற்போது அங்கு 10ஆம் கட்ட ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கீழடியின் முதல் 2 கட்ட அகழாய்வு அறிக்கைகளை இந்திய தொல்லியல் துறையிடம் அமர்நாத் சமர்ப்பித்திருந்தார். ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்திய தொல்லியல் துறை இந்த அறிக்கைகளை வெளியிடவில்லை. ஆனால் தொழில்நுட்ப விவரங்களுடன் அந்த அறிக்கையில் திருத்தங்கள் செய்ய அமர்நாத்துக்கு இந்திய தொல்லியல் துறை கடிதம் எழுதியிருந்தது. இதற்கு அமர்நாத் பதிலளிக்கையில் கீழடி ஆய்வறிக்கை சரியாகவே உள்ளது. தொன்மை அறிவியல் முறைப்படித்தான் ஆய்வு செய்யப்பட்டது. கி.மு. 5ஆம் நூற்றாண்டு முதல் கிமு. 8ஆம் நூற்றாண்டு வரை ஆய்வு செய்யப்பட்டே அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. எனவே திருத்தம் தேவையில்லை. அறிக்கையை தாக்கல் செய்து இரண்டரை ஆண்டுகள் கழித்து கேள்வி எழுப்பப்படுகிறது என அமர்நாத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கீழடியில் அடுத்தடுத்து கண்டுபிடிப்புகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
