எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை. டேனியல் ஆரோக்கியம் என்பவரின் விசைப்படகுடன் 7 மீனவர்கள் நடுக்கடலில் கைது செய்யப்பட்டனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்கள் மற்றும் படகினை இலங்கை கடற்படை சிறைப்பிடித்திருந்தனர்.
தமிழகத்தில் நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்து வருகிறார்கள். இப்படி மீன்பிடிக்கும் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து வருகிறது. அடிக்கடி இலங்கை கடற்படையினர் இத்தகைய செயலில் ஈடுபடுவதால் தமிழக அரசியல் கட்சிகள், ஆளும் கட்சி சார்பிலும் மத்திய அரசிடம் இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். எனினும் இதற்கு ஒரு முடிவு கிடைத்தப்பாடில்லை.
இந்த நிலையில் தான் நேற்று முன் தினம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றிருந்த போது இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 8 மீனவர்கள் மற்றும் அவர்களது படகினையும் இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது. இதற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் அவர்களை விடுவிக்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் 7 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த 7 மீனவர்கள் நேற்று கடலுக்குள் மீன்பிக்க சென்றிருந்தனர். இந்த நிலையில் அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்கள் 7 பேரையும் கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்கள் வந்த படகினையும் சிறைப்பிடித்து சென்றனர். தலை மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
