போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சைலேந்திர பாபு

போராட்டத்தை அவர்கள் உடனடியாக கைவிட வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.

இது குறித்து சைலேந்திர பாபு கூறியதாவது:-

மாணவி மரணம் குறித்து உரிய விசாரணை செய்யப்பட்டு வருகிறது. மாணவியின் தற்கொலை கடிதமும் மீட்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கும் வருகிறது. இந்தச் சூழலில் போராட்டம் என்கிற பெயரில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டு உள்ளனர். போலீசார், காவல்துறை வாகனங்கள், பள்ளி மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை அவர்கள் உடனடியாக கைவிட வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வீடியோ பதிவின் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வோம். எனவே, உடனடியாக போராட்டத்தை அவர்கள் கைவிட வேண்டும். போலீசாரை தாக்குவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறோம்.

சம்பவ இடத்தில் ஏற்கனவே 350 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அண்டை மாவட்டங்களில் இருந்தும், ஆயுதப்படையில் இருந்தும் கூடுதலாக 500 போலீசார் அனுப்பப்பட உள்ளனர். உயர் அதிகாரிகள் விரைந்து கொண்டு இருக்கின்றனர். ஆசிரியர்களின் மீதான புகாரில் உண்மைத்தன்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவியின் கடிதத்திலும் இதுபோன்ற மீது புகார் இல்லை. விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மாணவர்களா என்பது பிற்பாடு தான் தெரிய வரும். போராட்டக்காரர்கள் உடனடியாக போராட்டத்தைக் கைவிட வேண்டும்.

படிக்க அழுத்தம் கொடுப்பதாக மட்டும் மாணவி அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். மற்றபடி இவர்கள் கூறுவது போன்ற குற்றச்சாட்டுகள் எதுவும் மாணவி எழுதிய கடிதத்தில் இல்லை. வன்முறைக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது விசாரணையில் தெரிய வரும். போலீசாரில் சிலருக்கும் இதில் காயம் அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. விசாரணை உரிய முறையில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பெற்றோரிடமும் அனைத்தும் தெரியப்படுத்தப்படுகிறது. அங்கு போலீசார் தயார் நிலையில் தான் இருந்தார்கள். ஆனால், வன்முறையில் ஈடுபட்டவர்கள் திடீரென கலவரத்தில் ஈடுபட்டதால் அசாதாரண சூழல் உருவானது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையில் ஈடுபட திட்டமிட்டு இருந்தது போலவே தெரிகிறது.

வன்முறையில் ஈடுபட்டவர்களிடம் இருந்தே இழப்பீடுகளை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டு ஆசிரியர்கள் மீது புகார் சொல்கிறார்கள். அவர்கள் படிக்கத் தான் கூறியதாகவும் தன்னால் தான் படிக்க முடியவில்லை என்று மாணவி கடிதத்தில் கூறியுள்ளார். முழு விசாரணைக்குப் பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும். எந்த காரணமும் இல்லாமல் ஆசிரியர்கள் கைது செய்ய முடியாது. இதையும் நாங்கள் பெற்றோரிடம் தெரிவித்து உள்ளனர். இதுவரை பள்ளியில் தவறுகள் இருப்பதாகத் தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் அந்த மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கையில், அவருக்கு தலையில், மூக்கில், தோள்பட்டையில் அடிபட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் அவரின் ஸ்கூல் யுனிபார்மில் மேலாடை, கால் சட்டை, மேல் மற்றும் கீழ் உள்ளாடை இரண்டிலும் ரத்த கரை இருந்ததாக கூறப்பட்டுள்ளது. மார்பு பகுதி, கை பகுதி ஆகியவையும் உடைந்து இருந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இடது தலை பகுதி உடைந்து இருந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காயங்கள் அவரின் உடலில் இருந்த காயங்கள் எல்லாம் புதிய காயங்கள்தான். பழையது கிடையாது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதிக அளவில் ரத்தம் வெளியேறியது, காயங்கள் காரணமாக ஏற்பட்ட ஷாக் ஆகியவைதான் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று அறிக்கையின் இறுதியில் கூறப்பட்டுள்ளது. அதே சமயம் கெமிக்கல் சோதனைக்கு பின்பே முழுமையான முடிவுகள் வரும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.