கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் 144 தடை உத்தரவு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்தது மாவட்ட நிர்வாகம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவியின் இறப்பிற்கு நீதி கேட்டு இன்று போராட்டக்காரர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பள்ளிக்குள் புகுந்து பேருந்துகளை கொளுத்தி சேதப்படுத்தியுள்ளனர். மேலும், நடந்த கலவரத்தில் தீயணைப்பு வாகனங்கள் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியதில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக போலீசார் தடியடி நடத்தி பள்ளிக்கு அருகே குவிந்திருந்த போராட்டக்காரர்களை விரட்டினர். ஆனால், பள்ளிக்கு சற்று தொலைவில் போராட்டக்காரர்கள் ஆங்காங்கே குவிந்திருப்பதால் அசம்பாவிதத்தை தடுக்கும் பொருட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் ஶ்ரீதர் பிறப்பித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பை கண்டித்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதையடுத்து அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு கலவரக்காரர்கள் விரட்டி அடிக்கப்பட்டதுடன், அந்த பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மாணவி இறப்பு விவகாரத்தில் என்ன நடந்தது என பள்ளியில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் கலவரம் நடைபெற்ற பள்ளி வளாகத்தில் கூடுதல் டிஜிபி தாமரை கண்ணன் ஆய்வு செய்தார். கள்ளக்குறுச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், விசாரணை தொடர்ந்து சரியான முறையில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த மூன்று நாட்களாக பள்ளி நிர்வாகத்தினரிடமும், சிசிடிவி காட்சிப் பதிவுகளை சேகரித்தும், கைரேகைகளை தடயவியல் துறைக்கு அனுப்பி வைப்பது என்று விசாரணை கடந்த 3 நாட்களாக முறையாக நடந்துவருகிறது. இதுமட்டுமின்றி, உயர் நீதிமன்றத்திலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. பள்ளியின் சிசிடிவி காட்சிகள், மாணவியின் உடற்கூராய்வு அறிக்கை ஆகிய ஆவணங்களை நாளை தாக்கல் செய்யவுள்ளோம்.

விசாரணையைப் பொருத்தவரை, மாவட்ட நிர்வாகம், காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த போராட்டத்தில், பல்வேறு மாணவர் அமைப்புகள், மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் கடந்த இரண்டு மூன்று நாட்களாக, மாணவியின் பெற்றோர், மற்றும் பல்வேறு அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டுதான் இருந்தோம். அவர்கள் தரப்பில் வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை, விசாரணை உரிய முறையில் நடத்த வேண்டும். விசாரணையில், சந்தேகம் ஏற்பட்டால், பள்ளிக்கு சீல் வைக்க வேண்டும். பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில்தான் விசாரணை நடத்தி வருகின்றோம்.

இன்று பல்வேறு அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டுதான் வந்தது. அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர்கள், ஐஜி உள்ளிட்டோர் வந்துள்ளனர். கலவரம் பரவாத வகையில் காவல்துறையினர் சுமுகமாகத்தான் கையாண்டனர். கூடுதல் காவல்துறையினர் வந்தவுடன் போராட்டக்காரர்களை கலைத்துள்ளோம். கள்ளக்குறிச்சி தாலுகா மற்றும் பள்ளிக்கு அருகில் இருக்கக்கூடிய சின்னசேலம் மற்றும் நயினார் பாளையம் ஆகிய பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.